கவினுடன் இணையும் நயன் தாரா… கசமுசா கதையா?
மளமளவென வளர்ந்து வரும் கவின் இப்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாராவுடன் இணைந்து நடிக்கிறார். இந்த புதிய புதிய படத்திற்கு ஹாய் என பெயரிடப்பட்டுள்ளது
லிப்ட், டாடா, ஸ்டார் மற்றும் கிஸ் என தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்தவர் கவின்.
தற்போது இவர் , லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விஷ்ணு எட்வின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது.
இந்த படத்தில் நயன்தாரா மற்றும் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தன்னை விட வயதில் சிறியவனை காதலிக்கும் பாத்திரத்தில், ஏற்கனவே சிம்புவுடன் வல்லவன் படத்தில் நடித்தார் நயன் தாரா. இப்போதும் அதே போன்ற கதையமைப்பிலேயே ஹாய் தயாராகி வருகிறதாக சொல்லப்படுகிறது.
மேலும் கவின் நடித்த படங்கள் ஆங்கிலத்தில் பெயரிட்டதால் வெற்றி பெற்றதால் ஹாய் என பெயரிடப்பட்டுள்ளதாம்.
வள்ளலார் வழியில் சிம்பு
கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் புதிய படத்தின் பெயர் அரசன் என அக்டோபர் 7 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
தனது பட வெளியீட்டு அறிவிப்பை ஒட்டி வடலூர் சத்திய ஞான சபையில் வழிபட்டு, தியானம் செய்திருக்கிறார்.
கடலூர் மாவட்டம், வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை உள்ளது. இங்குள்ள தருமசாலையில் உள்ள அணையா அடுப்பு இன்று வரை பலரின் பசியைப் போக்கி வருகிறது. தினமும் மூன்று வேளை சமைக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் சிலம்பரசன் அக்டோபர் 7 ஆம் தேதி காலை வடலூர் சத்திய ஞானசபைக்கு சென்று, சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தியானம் செய்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் சிலம்பரசன் கூறுகையில், “ஏழை எளிய ஆதரவற்றோரின் பசியைப் போக்கி மூன்று வேளையும் அன்னதானம் வழங்கும் வள்ளலாரை போல, நானும் அனைவருக்கும் அன்னதானம் வழங்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்.
நான் சைவம் தான். அதனால் தான் வள்ளலார் அழைத்த உடன் வடலூர் சத்திய ஞானசபைக்கு வருகை தந்து வள்ளலார் சுவாமி களை வழிபட்டிருக்கிறேன்” என்றார்.
ஹீரோவாகும் இன்பநிதி…
அண்மையில் வெளியான தனுஷின் இட்லி கடை படத்தை துணை முதல்வர் உதயநிதியின் மகன் இன்ப நிதி வெளியிட்டார், இந்நிலையில், இன்பநிதி கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பொறுப்பு ஏற்றுக் கொள்வதற்கு முன்பு மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்தார். அதன் பின் அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. இனி சினிமாவில் நடிக்கமாட்டேன் என்றும் அறிவித்துவிட்டார்.
அதேநேரம் வெளிநாட்டில் படித்த அவரது மகன் இன்ப நிதி, இட்லி கடை படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தவர் இப்போது கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
உதயநிதியின் கடைசி படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ்தான், இன்ப நிதியின் முதல் படத்தை இயக்க இருக்கிறார் என்றும் தகவல்கள் பறக்கின்றன. ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை.
காந்தாராவை பாராட்டித் தள்ளிய அண்ணாமலை
சமீபத்தில் வெளியான ‘காந்தாரா: சாப்டர் 1’ திரைப்படம் உலகமெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. வெளியான சில நாட்களிலேயே நூற்றுக்கும் மேற்பட்ட கோடிகளை வசூலில் குவித்து வருகிறது காந்தாரா.
இந்நிலையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அபூர்வமாக காந்தாரா சினிமாவை பாராட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “காந்தாரா சாப்டர் 1 பார்த்தேன், நம்பிக்கை மற்றும் நாட்டுப்புறத்தின் மூச்சடைக்கும் கலவை!ரிஷப் ஷெட்டி அவர்கள் தர்மம், துளு நாட்டின் கலாச்சாரம், பஞ்சுர்லி தேவா மற்றும் குலிகாவின் வழிபாடு மற்றும் அவற்றின் பல்வேறு வெளிப்பாடுகள் ஆகியவற்றை ஒன்றுசேர்த்து, இயக்குனர் மற்றும் முன்னணி நடிகராக ஒரு அருமையான நடிப்பை நிகழ்த்துகிறார். Woke culture நம் திரைப்படங்களில் ஆதிக்கம் செலுத்தும் காலகட்டத்தில், மீண்டும் பாரதத்தின் ஆன்மாவை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த Hombale Films க்கு வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார் அண்ணாமலை.
