செங்கோட்டையன் கதறும் பின்னணி!
செப்டம்பர் 24ஆம் தேதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரனை அதிமுகவின் முன்னாள் ஈரோடு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் சந்தித்து பேசியதாக தொலைக்காட்சிகளில் செய்திகள் வந்தன.
சில நாட்களுக்கு முன்பு தினகரனை பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். இந்நிலையில் செங்கோட்டையனும் தினகரனை சந்தித்த தகவல் தீயாகப் பரவியது.
செப்டம்பர் 5ஆம் தேதி அதிமுகவில் இருந்து பிரிந்து அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும், அதற்கு பத்து நாட்கள் கெடு விதிக்கிறேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நிபந்தனை விதித்தார் செங்கோட்டையன். ஆனால் அடுத்த நாளான செப்டம்பர் 6ஆம் தேதியே செங்கோட்டையனை அமைப்புச் செயலாளர், மாவட்டச் செயலாளர் ஆகிய கட்சி பதவிகளில் இருந்து நீக்கினார் எடப்பாடி.
அதன் பிறகு செங்கோட்டையன் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்ததாக கூறினார். ஆனால் நாடாளுமன்ற வளாகத்தில் அமித் ஷாவை ஓரிரு நிமிடங்கள் சந்தித்து நலம் விசாரித்தார் என்பது எடப்பாடிக்கு கிடைத்த டெல்லி தகவலாக இருந்தது. அதன் பிறகு எடப்பாடி பழனிசாமியும் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து விட்டு வந்து விட்டார்.
இந்த நிலையில் தான் ஈரோடு மாவட்டத்தில் செங்கோட்டையன் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அகற்றப்பட்டதும் அதிமுகவிலிருந்து வெளியே சென்ற பல்வேறு நிர்வாகிகளும் சேலத்தில் எடப்பாடி சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைந்தனர். மேலும் எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனின் மாவட்டமான ஈரோடு மாவட்டத்தில் பரப்புரை செய்து கொண்டிருந்த நிலையில் தான் சென்னையில் செங்கோட்டையன் தினகரனை சந்தித்தார் என தகவல் பரவியது.
உடனடியாக இதுகுறித்து கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசித்தார் எடப்பாடி பழனிசாமி.
அப்போது அதிமுக துணை பொதுச்செயலாளர் கே பி முனுசாமி, “அன்றைக்கு செப்டம்பர் ஆறாம் தேதி நாம் திண்டுக்கல்லில் ஆலோசனை நடத்திய போதே அவரை கட்சியிலிருந்து நீக்குங்கள் என்று நான் கூறினேன். நீங்கள்தான் முதலில் பதவியில் இருந்து நீக்குவோம் என்று சொன்னீர்கள். அதிமுகவுக்கு எதிராக தொடர்ந்து செயல்படுபவர்களை அவர் அதிமுகவில் இணைக்க சொல்கிறார். இதன் மூலம் அவர் கட்சி விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுகிறார். எனவே இப்போதாவது அவரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
ஏற்கனவே செங்கோட்டையன் கட்சிப் பதவிகள் பறிபோன நிலையில் அவருடைய அடிப்படை உறுப்பினர் பதவியும் பறிக்கப்படும் என்ற தகவல் சென்னையில் இருந்த செங்கோட்டையனுக்கு கிடைத்தது. அதனால் டிடிவி தினகரனை சந்திப்பதை தவிர்த்து விட்டார் செங்கோட்டையன்.
அதன் பின் செப்டம்பர் 25ஆம் தேதி,”நான் சென்னையில் யாரையும் சந்திக்கவில்லை. என்னுடைய மனைவி சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்க்கத்தான் போனேன். என் சொந்த வேலைகளை முடித்துவிட்டு ஊர் திரும்பி விட்டேன். பொதுவாக அரசியல் ரீதியாகவோ தனியாகவோ யாரையும் நான் சந்திக்கவில்லை. கட்சி நன்றாக இருக்க வேண்டும், அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்ற நோக்கம்தான் எனக்கு இருக்கிறது. எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்பதால்தான் அன்றைய தினம் அப்படி கோரிக்கை வைத்தேன். வேறு யாரையும் இப்போது சந்திக்கும் திட்டம் எதுவும் என்னிடம் இல்லை. நல்லது நடக்கும் என்று நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார் செங்கோட்டையன்.
தனது அடிப்படை உறுப்பினர் அந்தஸ்தையாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று முடிவு எடுத்து தான் செங்கோட்டையன் தினகரனை சந்திக்காமல் ஈரோடு திரும்பிவிட்டார் என்கிறார்கள். அவருடைய ஆதரவாளர்கள்.
