பிகார் சட்டமன்றத் தேர்தல் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடக்க இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகளை தேர்தல் ஆணையம் ஏற்கனவே தொடங்கிவிட்டது.
இந்நிலையில் 243 தொகுதிகளை உள்ள்டக்கிய பிகார் மாநிலத்தில் இப்போது எதிர்க்கட்சிகளாக இருக்கும் தேஜஸ்வியின் ராஷ்டிரிய ஜனதா தளமும், காங்கிரஸும் தொகுதிப் பகிர்வை இணக்கமாக நடத்திக் கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சமீபத்தில் பிகார் முன்னாள் முதல்வர் தேஜஸ்வி யாதவ், “ இந்த முறை, தேஜஸ்வி 243 இடங்களிலும் போட்டியிடுவது தேஜஸ்வி யாதவ்தான்.. . அது போச்சாஹானாக இருந்தாலும் சரி, முசாபர்பூராக இருந்தாலும் சரி, தேஜஸ்வி போட்டியிடுவார். உங்கள் அனைவருக்கும் எனது வேண்டுகோள் என்னவென்றால், என் பெயரில் வாக்களியுங்கள். பீகாரை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்கு தேஜஸ்வி பாடுபடுவேன்… நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த அரசாங்கத்தை பதவி நீக்கம் செய்ய வேண்டும்,” என்று முசாபர்பூருக்கு அருகிலுள்ள காந்தியில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் கூறினார்.
மதுரை மாநாட்டில் விஜய் பேசினாரே ஞாபகமிருக்கிறதா? மதுரை மேற்கு விஜய், மதுரை மத்தி விஜய், சோழவந்தான் விஜய், உசிலம்பட்டி விஜய்… என அதேபோலத்தான் அதே மாடுலேஷனில்தான் தேஜஸ்வி யாதவ்வும் பிகாரில் பேசியிருக்கிறார்.
அப்படியென்றால் காங்கிரசுடனான கூட்டணி என்னாச்சு? சீட் ஷேரிங் என்னாச்சு என்ற கேள்விகள் பிகார் அரசியலில் எழுந்திருக்கின்றன.
காங்கிரஸுடன் அதிகரித்து வரும் மோதல்களுக்கு மத்தியில்தான் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ்வின் இந்த அறிவிப்பு வந்துள்ளது. தேஜஸ்வி யாதவ்வை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என காங்கிரசை ராஷ்டிரிய ஜனதா தள கேட்டுக்கொண்டது. ஆனால் இதுகுறித்து காங்கிரஸ் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை, அதாவது தேஜஸ்வியை முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்க காங்கிரஸ் விரும்பவில்லை.
2020 சட்டமன்றத் தேர்தலில் குறைவான இடங்களில் போட்டியிட வேண்டும் என்ற ஆர்ஜேடியின் அழுத்தத்தை காங்கிரஸ் எதிர்த்தது. பின்னர், காங்கிரஸ் 70 இடங்களில் போட்டியிட்டது, ஆனால் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது – அந்த எம்.எல்.ஏக்களில் இருவர் பின்னர் கட்சியை விட்டு வெளியேறினர். காங்கிரஸின் மோசமான வெற்றி விகிதம்தான் இன்று
பிகாரில் நிதிஷ்குமார் முதல்வராக உட்கார்ந்திருப்பதற்கு காரணம் என ஆர்ஜேடி தலைவர்கள் வாதிடுகின்றனர்.
இதற்கிடையில், காங்கிரஸ் 2020 இல் இழந்த 51 இடங்களில் குறைந்தது 37 இடங்களை தொடக்கத்திலிருந்தே “வெல்ல முடியாதது” என்று அடையாளம் கண்டுள்ளது, மேலும் “வெல்லக்கூடிய” தொகுதிகளில் அதிக பங்கை விரும்புகிறது என்று வலியுறுத்துகிறது. இந்தச் சூழலில் பார்க்கும்போது, தேஜஸ்வியின் ‘243 தொகுதிகளிலும் நான் தான் வேட்பாளர்’ என்ற கருத்து காங்கிரசுக்கு ஒரு மறைமுக எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
ராகுல் காந்தி-தேஜஸ்வி யாதவ் இணைந்து நடத்திய ‘வாக்காளர் அதிகார யாத்திரை’ சமீபத்தில் ஏற்படுத்திய உத்வேகம், பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு எதிரான எதிர்க்கட்சிகளின் “வாக்காளர் சோரி” குற்றச்சாட்டுகள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. ஆனால் அதற்காக கூட்டணியில் ஆட்சி அமைக்கும் வகையில் அதிக இடங்களில் போட்டியிடுவதில் தேஜஸ்வி உறுதியாக இருக்கிறார். 2020 தேர்தலைப் போல காங்கிரஸ் 70 இடங்களில் போட்டியிட்டு அதன் வெற்றி விகிதம் குறைந்துவிட்டால் என்ன செய்வது என்ற யோசனையும் அவரிடம் இருக்கிறது.
அதனால்தான் ஆர்ஜேடியின் விதிமுறைகளுக்கு உடன்படுங்கள் அல்லது தனியாகப் போட்டியிடும் வாய்ப்பு உள்ளது என்பதை தேஜஸ்வி கோடிட்டுக் காட்டியுள்ளார்.
243 தொகுதிகளிலும் நான் தான் வேட்பாளர் என்ற தேஜஸ்வி யாதவ்வின் பேச்சு, காங்கிரஸ் மற்றும் சிறிய கூட்டணிக் கட்சிகளிடம் இருந்து அதிகாரப்பூர்வ ஒப்புதல் இல்லாமல் – கூட்டணியின் முகமாக தன்னை ஒருதலைப்பட்சமாக முன்னிறுத்துவது கூட்டணிக்குள் பிரச்சினையை உண்டுபண்ணியுள்ளது.
ராஷ்டிரிய ஜனதா கட்சி மகாகத்பந்தனின் மிகப்பெரிய சக்தியாக இருந்தாலும் -2020 சட்டமன்றத் தேர்தலில் 144 இடங்களில் போட்டியிட்டு, 75 இடங்களை மட்டுமே பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆர்ஜேடி மற்றும் பாஜக இரண்டும் அதிகாரத்தைப் பெறுவதற்கு கூட்டணிக் கட்சிகளை பெரிதும் நம்பியுள்ள ஒரு மாநிலத்தில், ஒற்றுமை என்பது வெறும் அடையாளமாக மட்டுமல்ல, அவசியமாகவும் உள்ளது.
பிகார் அரசியல் வட்டாரங்களில் விசாரித்தபோது, “ வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி குறைவான இடங்களில் அதாவது சுமார் 60 இல் மட்டுமே போட்டியிட வேண்டும் என்று ஆர்.ஜே.டி. கூறுகிறது. அதனால் வலுவான வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கவேண்டும் என்றும் ஆர்.ஜே.டி. கேட்கிறது. ஏற்கனவே 90க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து 3,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை காங்கிரஸ் பெற்றுள்ளது. அக்டோபர் முதல் வாரத்தில் இடப் பகிர்வு ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு ராகுல் காந்தி இன்னும் பதில் சொல்லவில்லை. ராகுலின் பதிலில்தான் பிகார் சட்டமன்றத் தேர்தலின் முக்கியத்துவம் இருக்கிறது” என்கிறார்கள்.
