செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் மற்றும் தாம்பரம் நகராட்சிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்காக, வண்டலூரை அடுத்த வேங்கடமங்கலத்தில் மீண்டும் குப்பை கிடங்கு திறக்கப்பட உள்ளதாக வெளியான தகவலால், கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த குப்பை கிடங்கு, கடந்த 2015-ம் ஆண்டு ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு, மறுசுழற்சி மற்றும் உரம் தயாரிக்கும் பணிகள் முறையாக நடைபெற்றன.
ஆனால், நாளடைவில் இந்த பணிகள் நிறுத்தப்பட்டு, குப்பைகள் மலை போல் குவிக்கப்பட்டன. சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார சீர்கேடு கடந்த காலத்தில் இங்கு குவிக்கப்பட்ட குப்பைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதால், பெரும் புகை மூட்டம் பல கிலோமீட்டர் தூரத்திற்கு பரவியது இதனால் அப்பகுதி மக்கள் கண் எரிச்சல், ஆஸ்துமா, போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டனர்!

மேலும், குப்பைகளில் இருந்து உருவாகும் கொசுக்களால் தொற்று நோய்கள் பரவும் அபாயமும் அதிகரித்தது. சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் சுகாதார சீர்கேடு காரணமாக, பொதுமக்களின் தொடர் போராட்டங்களைத் தொடர்ந்து, இந்த குப்பை கிடங்கு மூடப்பட்டது.
இந்த நிலையில், மூடப்பட்ட குப்பை கிடங்கை மீண்டும் திறக்க உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், ஏற்கனவே அனுபவித்த பாதிப்புகளை மீண்டும் சந்திக்க நேரிடும் என அஞ்சுகின்றனர். இந்த குப்பை கிடங்கு மீண்டும் திறக்கப்பட்டால், தங்கள் கிராமத்தின் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரமும் கடுமையாக பாதிக்கப்படும் என்று அவர்கள் கருதுகின்றனர். போராட்டம் மற்றும் கோரிக்கைகள்
இந்த நிலையில் வேங்கடமங்கலம் கிராம மக்கள் திரண்டு, குப்பை கிடங்கை மீண்டும் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“எங்கள் கிராமத்தை குப்பைக் கிடங்காக மாற்றாதீர்கள்,” “சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள்” போன்ற கோஷங்களை எழுப்பி, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். மீண்டும் குப்பை கிடங்கு திறக்கப்பட்டால், அதை எதிர்த்து மேலும் தீவிரமான போராட்டங்களை முன்னெடுக்க போவதாகவும் கிராம மக்கள் எச்சரித்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, இந்த குப்பை கிடங்கை மீண்டும் திறக்கும் முடிவை கைவிட வேண்டும் என்றும், வேங்கடமங்கலம் கிராம மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.