புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு கோபிநாத்(23) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கோபிநாத் தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி கோபிநாத் 12ம் வகுப்பு தேர்ச்சி அடைந்த 2020இல் மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு அந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை எதிர்கொண்டு அதில் 248 மதிப்பெண்களை பெற்று மாற்றுத்திறனாளிகள் ஆர்த்தோ பிரிவில் நடந்த கலந்தாய்வுக்கு சென்றபோது கோபிநாத் தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரால் மருத்துவம் படிக்க அவரது உடல் ஒத்துழைக்காது என்று கூறியதைத் தொடர்ந்து மனம் உடைந்த கோபிநாத் தனது மருத்துவர் கனவு சிதைந்து விட்டது என்ற வருத்தத்தோடு வீடு திரும்பியுள்ளார்.

பின்னர் மனம் உடைந்து இருந்த கோபிநாத்தை அவரது தாயார் கவிதா கல்வியால் மட்டும் தான் நீ வெளி உலகத்திற்கு வர முடியும் உன்னால் முடியாதது எதுவுமில்லை உன்னால் எதுவும் முடியும் என்று நம்பிக்கை வார்த்தைகளால் தேற்றி கோபிநாத்தை காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வியில் பி ஏ வரலாறு எடுத்து படிக்க வைத்துள்ளார். மற்ற பாடப்பிரிவுகளை எடுத்து படித்தால் சந்தேக கேட்பதற்காக உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ள கோபிநாத் வெளியே செல்லும் நிலை இருக்கும் என்று எண்ணி பி ஏ வரலாறு பாடத்திட்டத்தை எடுத்து படித்துள்ளார்.

தற்பொழுது எம் ஏ இரண்டாம் ஆண்டு படித்து வரும் கோபிநாத் மனம் தரலாமல் தனது குடும்ப வருவாய் இல்லாமல் பொருளாதார நெருக்கடியில் சிக்கியதை எண்ணி
ஆறு மாத காலம் இரவு பகலாக தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசின் பள்ளி பாட புத்தகங்களை படித்தும் தினசரி செய்தித்தாள்களை படித்தும் சமீபத்தில் நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்வை முதன்முறையாக எழுதி அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்று பொதுப் பிரிவில் தேர்வாகி பின்னர் அந்த பிரிவில் இவர் சார்ந்திருக்கும் வகுப்பிற்கு இடம் இல்லாததால் பின்னர் மாற்றுத்திறனாளிகள் இட ஒதுக்கீட்டில் பிசி ஆர்த்தோ பிரிவில் கூட்டுறவுத் துறையில் முதுநிலை ஆய்வாளர் பணியை பெற்று சாதித்துள்ளார்.

இந்நிலையில் குரூப் 2ஏ தேர்வில் தேர்ச்சி பெற்று கூட்டுறவுத் துறையில் முதுநிலை ஆய்வாளர் பணி நியமனம் பெற்ற மாற்றுத்திறனாளி மாணவனை கடந்த வாரம் 11 தேதி ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான சிவ. வீ. மெய்யநாதன் நேரில் சந்தித்து, வாழ்த்து தெரிவித்தார் அப்போது மாற்றுத்திறனாளி இளைஞர் கோபிநாத் அமைச்சர் மெய்யநாதனிடம் தனக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி வாகனம் வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் பரிந்துரை பேரில் மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் வழங்கப்பட்ட பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி வாகனத்தை மாற்றுத்திறனாளி மாணவனுக்கு அமைச்சர் வழங்கினார்.