புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள அரசடிபட்டி நால்ரோடு பகுதியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது பேசிய அவர், 15 துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள் ஒரே இடத்தில் முகாமிட்டு மக்களுடைய குறைகளை நிவர்த்தி செய்யும் மகத்தான திட்டம் தான் இந்த உங்களுடன் ஸ்டாலின் திட்டம் என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் கனவு திட்டமான இந்த உங்களுடன் ஸ்டாலின் திட்டமானது மக்கள் ஒவ்வொரு அலுவலகமாக சென்று அலைவதை தவிர்த்து அதிகாரிகள் மக்களை சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்றும் திட்டமாகும் என தெரிவித்த அமைச்சர் இந்தியாவிலேயே இது போன்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய ஒரே முதலமைச்சர் நம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என்று பெருமிதம் தெரிவித்தார்.
நலன் காக்கும் ஸ்டாலின் போன்ற உயர் மருத்துவ சிகிச்சை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்தால் தமிழ்நாட்டின் எந்த அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று கொள்ளலாம் என்று குறிப்பிட்டார்.
2026ஆம் ஆண்டு தேர்தலில் நம் முதலமைச்சர் மீண்டும் வெற்றி பெற்றால் தான் மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, இன்னுயிர் காக்கும் திட்டம், நம்மை காக்கும் 48 திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் என பல திட்டங்கள் தொடரும் என எடுத்துரைத்தார்.
வயதானவர்கள் வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் தாயுமானவர் திட்டத்தை கடந்த வாரம் நம் தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்து தற்போது அந்த திட்டமானது மக்களியிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் இருக்கக்கூடிய அனைத்து மாணவ மாணவிகள் விடுதிகளை புதுப்பிக்க 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யபட்டு அதற்கும் நிதி வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
இம்முகாமில் திமுக பிரமுகர்கள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.




