கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட அளவில் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் தங்கவேல், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தனர்.

இந்நிலையில், தோழர் களம் என்கின்ற அமைப்பினை சார்ந்த நிர்வாகிகள், அதன் நிறுவனர் மற்றும் தலைவர் தி.க.சண்முகம், தலைமை நிலைய செயலாளர் தமிழன் கவின்குமார் ஆகியோர் உள்ளிட்ட 5 நபர்கள் மாவட்ட ஆட்சியர் தங்கவேலுவிடம் மனு ஒன்றினை அளித்தனர். அதில் நவீன தீண்டாமை கரூர் மாவட்டத்தில் அதிகரித்து வருவதாகவும், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் ஆகிய வட்டங்களில் உள்ள குக்கிராமங்களில் இரட்டை டம்ளர் முறையில் தான் டீ, காபி விற்கப்படுவதாகவும், சில்வர் டம்ளர், கண்ணாடி டம்ளர், பேப்பர் கப்புகளில் என்று மூன்று விதமாக பிரித்து இன்றும் கிராமங்களில் விற்பனை செய்யப்படுவதோடு, சலூன் கடைகளில் தாழ்த்தப்பட்டோர்களை அனுமதிப்பதில்லை.


நகரங்கள் மற்றும் பேரூராட்சிகளிலும் கரூர் மாவட்ட அளவில் ஜாதியை நினைவுப்படுத்தும் விதமாக டீ கடை, டிபன் கடை மற்றும் மளிகை கடைகள் பெயர்கள் இன்றும் இருந்து வருவதாகவும், ஒரு சில ஊர்களில் காலனிகள் அணிந்து செல்லவும், ஊர்களுக்குள் இருசக்கர வாகன்ங்களில் செல்லும் போது இறங்கி தான் செல்ல வேண்டுமென்றும், அந்த நிலை மாற வேண்டுமென்றும், இதனை நம் திராவிட மாடல் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து அகற்ற முழு வீச்சாக செயல்பட வேண்டுமென்றும் மனுவாக கொடுத்ததோடு, கோரிக்கைகளையாகவும் தெரிவித்தனர்.

இதுமட்டுமில்லாமல், ‘காலனி’ என்ற சொல் ஒடுக்குமுறையைக் குறிக்கும் வகையிலும், தீண்டாமை என்ற அர்த்தத்தைக் கொண்டதாகவும் இருந்ததால், அது அதிகாரப்பூர்வ பதிவுகளிலிருந்தும், பொதுப் பேச்சுவழக்கில் இருந்தும் நீக்கப்படும் என்று முதலமைச்சர் எம்.கே. ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் 29 ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் அறிவித்தார். ஆனால் கரூர் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் இன்றும் காலனி என்ற பெயர் மறைக்கவும் இல்லை, அழிக்கவும் இல்லை இன்றும் அதன் பெயர் சொல்லித்தான் கூறப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.




