புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி ஆகஸ்ட் 4-ம் தேதி ஆண்டுதோறும் தனது பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறார்.

அதன்படி இன்று பிறந்தநாள் கொண்டாடிய முதலமைச்சர் ரங்கசாமிக்கு அவரது ஆதரவாளர்கள் மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டவுட் பேனர்கள் மற்றும் அலங்கார வளைவுகள் வைத்து மாநில முழுவதும் நலத்திட்ட உதவிகள் அன்னதானம் மற்றும் கோவில்களில் தங்கத் தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் இன்று முதலமைச்சர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அப்போது பூங்கொத்துக்கள் கொடுத்தும் சால்வை அணிவித்தும் வாழ்த்துக்கள் தெரிவித்தார் இதேபோன்று புதுச்சேரியில் உள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரும் முதலமைச்சர் ரங்கசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதற்கு முன்னதாக அருள்மிகு மணக்குள விநாயகர் கோவிலில் அமைச்சர லட்சுமி நாராயணன் தலைமையில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கத்தேர் இழுத்து வழிபட்டனர்.