கும்பகோணத்தில் இருந்து தனியார் சொகுசு பேருந்து ஒன்று 36 பயணிகளை ஏற்றுக் கொண்டு பொங்கலூர் பல்லடம் வழியாக கோவை நோக்கி நேற்று இரவு புறப்பட்டது. ராபர்ட் என்ற ஓட்டுநர் பேருந்தை ஓட்டிவந்த போது இன்று அதிகாலை 5 மணியளவில் பொங்கலூர் அருகே மின் பகிர்மான அலுவலகம் அருகே தனியார் சொகுசு பேருந்து வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமாக அமைக்கப்பட்டிருந்த மின்கம்பத்தில் மோதி பேருந்து விபத்துக்குள்ளானது.

அதிர்ஷ்டவசமாக 36 பயணிகள் எந்தவித பாதிப்பும் இன்றி உயிர்த்தப்பினர். உடனடியாக மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் ஓட்டுநர் சிறு காயங்களுடன் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து நடந்த இடத்தில் மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த விபத்தால் பொங்கலூர் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் சுமார் 3 மணி நேரமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விபத்து குறித்து அவிநாசிபாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் பத்திரமாக அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.