பல்லா நெடுநெறிக் ககன்று வந்தெனப்
புன்றலை மன்றம் நோக்கி மாலை
மடக்கண் குழவி அணவந் தன்ன
நோயேம் ஆகுதல் அறிந்தும்
சேயர்தோழி சேய்நாட் டோரே.
பாடியவர்: கருவூர்க் கதப்பிள்ளை.
பாடலின் பொருள்:
தோழி, பல பசுக்கள், நெடுந்தூரம் நீங்கிச் சென்றதால், அவை தங்கியிருக்கும் பொலிவிழந்த இடத்தையுடைய மன்றத்தைப் பார்த்து, மாலைநேரத்தில், மடமை பொருந்திய கண்களையுடைய கன்றுகள் தலையெடுத்துப் பார்த்து வருந்துவதைப்போல் அவர் வரவை எதிர்பார்த்து நான் வருந்துவேன் என்பதை அறிந்திருந்தும், நெடுந்தூரத்திலுள்ள நாட்டுக்குச் சென்ற என் தலைவர், இன்னும் நெடுந்தூரத்திலேயே உள்ளாரே.
பாடலின் பின்னணி:
தலைவன் தன் மனைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். அவன் பிரிவினால் தலைவி வருந்துகிறாள். “உன் வருத்தம் உன் கணவருக்குத் தெரியும். அவர் விரைவில் வந்துவிடுவார்.” என்று தோழி தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள். அதற்கு மறுமொழியாக, “என் வருத்தம் தெரிந்தும் அவர் இன்னும் வரவில்லையே.” என்று தலைவி கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.