பணி நிரந்தரம், 7-வது ஊதியக்குழுவின் அடிப்படையில் நிலுவைத்தொகை வழங்க வேண்டும், பழைய பென்ஷன் தொகையை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை புதுச்சேரி அரசு நிறைவேற்றக்கோரி 200-க்கும் மேற்பட்ட நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் ஒரு நாள் பணியை புறக்கணித்து நூதன முறையில் அல்வா கொடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்தில் 5-ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர். இவர்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குதல் குடிநீர், தெருவிளக்கு, சாலை பராமரிப்பு, தூய்மை பணி, வரி வசூல் செய்வது உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு மத்திய அரசு அறிவித்த 7-வது ஊதியக்குழு பரிந்துரை படி நிலுவையில் உள்ள 33-மாதங்களுக்கான தொகையை வழங்க வேண்டும்,
ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அரசே நேரடியாக ஓய்வூதியம் மற்றும் நிலவை தொகைகளை வழங்க வேண்டும், நீண்ட காலமாக பணியாற்றி வரும் தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 200 க்கும் மேற்பட்ட நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் உள்ளாட்சி துறை தலைமை அலுவலகம் முன்பு ஒரு நாள் விடுப்பு எடுத்து அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.