பூக்கள் பேசுமா? ஆம். அதன் மொழியை மனிதர்கள் தான் இது நாள் வரை அறிந்து கொள்ளவில்லை. விளைவு-தேவையில்லாமல்,செயற்கை வேதிஉரங்களின் பயன்பாடு அதிகரித்ததால், மண்வளம் முழுமையாக பாதிக்கப்பட்டு,இயற்கை சூழல் பாழடிக்கப்பட்டு,மகரந்தச் சேர்க்கையில் ஈடுபடும் தேனீக்களின் வாழ்வே அழிந்து வருகிறது.
இந்தியாவில் 20% மற்றும் தமிழகத்தில் 20-40% தேனீக்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது! குறிப்பாக நியோநிக்கோட்டினாய்ட்ஸ் எனும் பூச்சிக்கொல்லி மருந்து அதிகம் பயன்படுத்தப்படுவதால் தேனீக்களின் அழிவிற்கு அவை ஒரு முக்கிய காரணியாக இருந்துள்ளது.
மிக அண்மையில்,Francesca Barbero-பிரான்செஸ்கா பார்பெரோ-உயிரியல் பேராசிரியர்-டூரின் பல்கலைக் கழகம் அவர்கள் செய்த ஆய்வு,இதுவரை பூக்களிடம் அறியப்படாத செய்தியை,ஆச்சர்யத்தை உலகிற்கு வெளிக்கொண்டு வந்துள்ளது.
பூக்கள், தங்களின் வண்ணம் மற்றும் வாசனை கொண்டு தேனீக்களை ஈர்ப்பதாக மட்டுமே அறிவியல் வாயிலாக இதுவரை தெளிவாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் பிரான்செஸ்கா பார்பெரோ அவர்கள் சினாப்டிராகன் மலருக்கும், ரோடான்திடியம் ஸ்டிக்டிக்கம்(Rhodanthidium sticticum)தேனீக்களுக்கும் இடையே உள்ள மகரந்த சேர்க்கை குறித்தான ஆய்வில் புதிய தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன.
அவை 188 வது Acoustical Society of America மற்றும் 25 வது அகிலஉலக ஒலியியல் காங்கிரஸிலும் மே18-23ல் வெளியாக உள்ளது.
முக்கிய செய்தி என்னவெனில், தேனீக்களின் குறைந்த ஒலிப்பான் சமிக்ஞைகளை மற்றும்,அதிர்வலைகளை பூக்கள் அறிந்து கொள்ளும் திறன் பெற்றவைகளாக உள்ளது.
பூக்களுக்கு மூளை இல்லை. இருந்தாலும் சூழலில் உள்ள மாற்றங்களை அறிந்து கொள்ளும் திறன் பூக்களிடம் உள்ளது. மனிதர்களிடம் மூளை இருந்தாலும்,மிதமிஞ்சிய பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டால் மண் வளம் பெருவாரியாக அழிக்கப்பட்டுள்ளது.
ஸ்னாப் டிராகன் பூக்கள் தேனீக்களின் ஒலி சமிக்ஞை மற்றும் அதிர்வலைகளை உணர்ந்து,அதற்கு ஏற்ப தேனின்(Nector) அளவு,அதிலுள்ள இனிப்பின்(Sugar)அளவை கணிசமாக உயர்த்துவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இது மூலக்கூறு அளவில்(Gene Expression)மாற்றம் நிகழ்வதால் நடக்கிறது. தாவரங்களில் இனிப்பு(Sugar) ஓரிடத்திலிருந்து இன்னொரு இடம் செல்வதில் மாற்றம்(Sugar Transportation),மற்றும் தேன் உற்பத்தி அளவில் மாற்றம் மூலக்கூறு அளவில் நிகழ்கிறது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஆய்வில் செயற்கை முறையில் தேனீக்கள் எழுப்பும் ஒலி சமிக்ஞைகள் பதிவு செய்யப்பட்டு,தேனீக்கள் இல்லாமலே,பதிவுசெய்யப்பட்ட சமிக்ஞைகளை பூக்கள் மலரும் காலத்தில் அதன் அருகே ஓடச்செய்யும் போது(Play),பூக்கள், தான் உற்பத்தி செய்யும் தேனின் அளவும்,அதிலுள்ள இனிப்பின் அளவும் கணிசமாகக் கூடியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இது குறிப்பிட்ட தேனீக்களுக்கு மட்டும் பொருந்துமா? அல்லது தேனீக்கள் இல்லாமல் வெறும் தேனை மட்டும் எடுத்து,ஆனால் மகரந்தச் சேர்க்கைக்கு முற்றிலும் உதவாத வண்டினங்களுக்கும் பொருந்துமா? என்றும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த இரண்டும் வேறாக இருக்கும் என்றே முதல்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
காரணம்-
மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் தேனீக்களின் ஒலியும்,தேனை மட்டுமே எடுத்துக் கொண்டு மகரந்தச் சேர்க்கைக்கு உதவாத பிற வண்டினங்களின் ஒலி சமிக்ஞையும் ஒன்றல்ல.மேலும், தேனீக்களின் செயல்பாடு,அந்த குறிப்பிட்ட தாவரங்களின் இனப்பெருக்கம்,வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருப்பதால்,பரிணாம வளர்ச்சி கோட்பாடின்அடிப்படையில், அது குறிப்பிட்ட தாவரத்தின் உயிர்வாழ்தலுக்கு(Survival Strategy) பெரிதும் உதவுவதால், பூக்களின் செயல்பாடு வேறுபட்டு இருக்கும் என்றே கணிக்கப்படுகிறது. இது பற்றி கூடுதல் தகவல்கள் ஆய்வுகளின் முடிவில் வெளியாகும்.

மறுதிசையிலும் ஆய்வு-
பூக்களும் தேனீக்களை ஈர்க்க ஒலி சமிக்ஞைகளை வெளியிடுகிறதா? என்ற ஆய்வும் நடந்து வருகிறது. ஆய்வு முடிவுகள்,பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு இல்லாமலே,ஒலியியல் வேளாண்மை(Acoustical Farming)மூலம் பூக்களின் வளர்ச்சியை பன்மடங்கு பெருக்க முடியுமானால்,புவிவெப்பமடைதல் பாதிப்பை அதிகம் ஏற்படுத்தும் செயற்கை பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு குறைக்கப்படுவதோடு, மண் வளமும் காக்கப்படுகிறது.
மணிநீரும்,மண்ணும் மலையும்,அணிநிழற் காடும் உடையது அரண்-என்பது நடைமுறை படுத்தப்பட்டு,புவிவெப்பமடைதல் பாதிப்பிலிருந்தும் உலகை காக்க முடியும் என்பதால், இத்தகைய ஆய்வுகள் இந்தியா/தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு,அவை பயன்பாட்டிற்கு வர அரசுகள் தீவிர முனைப்பு காட்ட வேண்டும்.
மக்களும்,அதற்கான அவசியத்தை உணர்ந்து அரசிற்கு உரிய அழுத்தத்தை தர வேண்டும். அறிவியல் ஆய்வுகள் நம்மை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு இட்டுச் செல்வதை மக்களாகிய நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்.