விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள காக்கிவாடான்பட்டி மம்சாபுரம், நதிக்குடி, திருவேங்கடபுரம், குகன்பாறை, சத்திரம், பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

இதில் நதிக்குடி பகுதியில் ஒரு மின் கம்பம் சேதமடைந்தது. நதிக்குடியில் இருந்து அச்சம்தவிழ்தான் வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் மெயின் ரோட்டில் இருந்த மரம் வேருடன் சாய்ந்ததால் வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதை இல்லாததால் கடந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். மேலும் சிவகாசியில் இருந்து நதிக்குடி வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து முழுமையாக பாதித்தது.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. குகன்பாறையில் இருந்து ஏழாயிரம் பண்ணை மெயின் ரோட்டில் பஸ் நிறுத்தத்தில் வேப்பமரத்தில் இருந்து மரக்கிளை சூறாவளி காற்றினால் திடீரென முறிந்து விழுந்தது. பஸ் நிறுத்தத்தில் யாரும் இல்லாததால் பாதிப்பு ஏற்படவில்லை. மேலும் இடி மின்னலுடன் தொடர்ந்து மழை பெய்ததால் பட்டாசு ஆலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டு தொழிலாளர்கள் வாகனங்களில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் இப்பகுதியில் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டது.