இரண்டு நாள் தமிழக பயணத்தை முடித்துவிட்டு, பாஜக தேசிய தலைவர் ஜே. பி.நட்டா டெல்லி புறப்பட்டார் .
நேற்று இரவு சென்னை வந்த பாஜக தேசிய தலைவர் ஜே. பி. நட்டாவை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பலர் வரவேற்றனர்.
இந்நிலையில் சென்னையில் தமிழக பாஜக மாநில மையக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டம், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அவர்கள் முன்னிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உருவானதைத் தொடா்ந்து கூட்டணியை விரிவாக்கம் செய்து பலப்படுத்துதல், கூட்டணி கட்சி நிா்வாகிகளிடம் ஒற்றுமையை ஏற்படுத்துதல் மற்றும் பா.ஜ.க.வினர் மற்ற கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்வது தொடா்பாக ஆலோசனை நடத்தப்படதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆறாவது சைவ சித்தாந்த மாநாட்டில் கலந்து கொண்டு அங்கிருந்து சாலை மார்க்கமாக வேலூரில் உள்ள கோல்டன் டெம்பிள் சென்ற ஜே. பி. நட்டா டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தர்ராஜன், கரு. நாகராஜன் உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் வழி அனுப்பி வைத்தனர்.