ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காவல் நிலையத்தில் புகார் அளித்தவரை வெட்டிக்கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாட்டக்குளம் அரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் முருகன்(29). கூலி தொழிலாளி. அதே பகுதியில் பெண்களை கேலி செய்து, தவறாக நடந்து வந்த லாரன்ஸ் என்ற யோகராஜ்(21) என்பவரை முருகன் கண்டித்ததால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. யோகராஜ் பெண்களை கேலி செய்வது குறித்து கிருஷ்ணன் கோவில் காவல் நிலையத்தில் முருகன் புகார் அளித்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆகஸ்ட் 24-ம் தேதி இரவு தனது வீட்டின் முன் அமர்ந்திருந்த முருகனிடம் தகராறில் ஈடுபட்ட லாரன்ஸ் அரிவாளால் வெட்டினார். தடுக்க முயன்ற முருகனின் உறவினருக்கு காயம் ஏற்பட்டது.
படுகாயமடைந்த முருகன் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்கு பின், மேல் சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கிருஷ்ணன்கோவில் போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து யோகராஜூவை கைது செய்தனர். வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. யோகராஜூக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஜெயக்குமார் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் திருமலையப்பன் ஆஜரானார்.