பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 2 பெண்கள் உள்பட 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தமிழ்நாடு அரசு குறித்தும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மீது புகார் கூறி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில், கழிவுநீர் அகற்றும் சேவை வாகனங்கள் தொடர்பான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக தமிழக அரசு குறித்து சவுக்கு சங்கர் வீடியோ வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையில், சவுக்கு சங்கர் தங்களை இழிவுபடுத்தி விட்டதாகக் கூறி தூய்மைப் பணியாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள சவுக்கு சங்கர் வீட்டின் முன்பு மார்ச் 24-ம் தேதி திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது சிலர் திடீரென சவுக்கு சங்கரின் வீட்டின் பின்பக்க கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தனர். வீட்டில் பொருட்களை அடித்துச் சேதப்படுத்தியதுடன், வீட்டுக்குள் கழிவுநீரையும், மனிதக் கழிவையும் ஊற்றியதாகக் கூறப்படுகிறது. அத்துடன் தடுக்க முயன்ற சவுக்கு சங்கரின் தாயாருக்கு கொலை மிரட்டலும் விடுத்தனர். இந்த சம்பவத்திற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்பட பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இச்சம்பவம் தொடர்பாக சவுக்கு சங்கர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருந்தார். அத்துடன் சிபிசிஐடி டிஎஸ்பி சசிதரன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் நடத்தியதாக 2 பெண்கள் உள்பட 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.