• Tue. Apr 22nd, 2025

அமித்ஷாவை சந்திக்க டெல்லி புறப்பட்டார் அண்ணாமலை!

ByP.Kavitha Kumar

Mar 27, 2025

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள்ள நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பணியில் திமுக உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளும் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றவர். மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அவருடன் அதிமுக எம்.பிக்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம் மற்றும் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் உடன் சென்றனர்.

இந்த சந்திப்புக்குப் பின்னர் உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் தளத்தில், “2026-ம் ஆண்டு​ தமிழகத்​தில்​ தேசி​ய ஜனநாயக கூட்ட​ணி ஆட்சி அமையும்”​ என்​று பதி​விட்டார். இதன் தொடர்ச்சியாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “எங்கள் சந்திப்பு 45 நிமிடங்கள் நடந்தது. அதில், முழுக்க முழுக்க மக்கள் பிரச்சினைகளை மட்டுமே பேசினோம். கூட்டணி பற்றியெல்லாம் எதுவும் பேசவில்லை. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. கூட்டணி எல்லாம் தேர்தல் நெருக்கத்தில் பேசப்படும்”​ என்று பதில் அளித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலை 7 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தலைவர்களைச் சந்தித்து தேர்தல் கூட்டணி குறித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.