மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை என்பதை ஏற்க முடியாது. அவ்வாறு நடந்தால் தமிழகம் 8 முதல் 12 மக்களவைத் தொகுதிகளை இழக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த அனைத்துக் கட்சிக் கூட்ட தீர்மானத்தின்படி, கூட்டு நடவடிக்கைக் குழு அமைத்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்று வருறுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள மாநில முதல்வர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,” மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை என்பதை ஏற்க முடியாது. அவ்வாறு நடந்தால் தமிழகம் 8 முதல் 12 மக்களவைத் தொகுதிகளை இழக்கும். எண்ணிக்கை தான் அதிகாரம். ஒருவேளை நமக்கான தொகுதிகளை நாம் இழந்தால் சொந்த நாட்டிலேயே அதிகாரமற்றவர்களாக இருக்க நேரிடும். பல்வேறு மொழிகள், பண்பாடுகள், உடைகள், வழிபாட்டு நம்பிக்கைகள் உள்ளிட்டவை கொண்டதுதான் இந்தியா.
அப்படியிருக்க மாநிலங்கள் சுயாட்சி தன்மையுடன் செயல்பட்டால்தான் இந்தியாவின் உண்மையான கூட்டாட்சி உருவாகும். மக்கள் தொகை அடிப்படையில் மறு சீரமைப்பு இருக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். நாம் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல. நியாயமான மறுசீரமைப்பை வரவேற்க தயாராக இருக்கிறோம். எப்போதுமே மாநிலங்களை ஒடுக்கும் கட்சியாக பாஜக உள்ளது, மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் கட்சியாக பாஜக உள்ளது.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை மூலம் கூட்டாட்சி அமைப்புக்கு சோதனை வந்துள்ளது. மேலும், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை என்பது தென் மாநிலங்களை கடுமையாக பாதிக்கும். காலம் காலமாக பாதுகாக்கப்படும் நமது சமூக நீதி பாதிக்கப்படும். அதனைத் தடுக்க இந்திய ஜனநாயகத்தை காக்க நாம் இங்கு ஒன்று கூடியுள்ளோம். இவ்விவகாரத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் விளக்கம் தெளிவாக இல்லை. குழப்பத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது அதனாலேயே முன் எப்போதும் இல்லாத ஒற்றுமையுடன் தமிழகம் ஒன்றிணைந்துள்ளது. இதே ஒற்றுமையுடன் இந்த அரங்கில் கூடியுள்ள அனைவரும் செயல்பட வேண்டும்” என்றார்.













; ?>)
; ?>)
; ?>)