• Mon. Nov 24th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இனிமேல் இப்படி நிகழாமல் பார்த்துக் கொள்கிறேன்” – மன்னிப்பு கேட்ட அமைச்சர் கே.என். நேரு

Byமதி

Nov 28, 2021

நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனை ஒருமையில் பேசியது தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு வருத்தம் தெரிவித்துள்ளார்.

மதுரையில் கடந்த புதனன்று தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என்.நேரு மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் விமான நிலைய விரிவாக்க கட்டுமான பணிகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த நேரு, “சம்பந்தப்பட்டவர்களை விட்டு விட்டு என்னிடம் கேள்வி கேட்கிறீர்கள். வெங்கடேசன்னு ஒரு ஆளு இருக்கான். அந்தாளுட்ட கேளுங்க. எங்கிட்ட கேட்கிறீங்க..” என்று ஒருமையில் பேசி பதிலளித்தார். அவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்தது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், ”மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பான ஊடகங்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு அவர்கள், தோழர் சு.வெங்கடேசன் எம்.பி. குறித்து ஒருமையில் பேசியிருப்பது அரசியல் நாகரீகமற்றது. பொதுவாழ்வில் இருப்போர் நிதானத்துடன் பேசுவதையே மக்கள் விரும்புவார்கள், ஏற்பார்கள்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் தான் ஒருமையில் பேசியதற்கு கே.என்.நேரு வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், ”பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் அவர்களை ஒருமையில் குறிப்பிட்டது மனவருத்தப்படுத்தியிருந்தால் பொறுத்தருள்க. இனிமேல் இவ்வாறு நிகழாது பார்த்துக்கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.