• Wed. Sep 23rd, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

அகழாய்வில் கிடைத்த சுடுமண் காதணி மற்றும் ஏராளமான கண்ணாடி மணிகள்

ByK Kaliraj

Mar 7, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா விஜய கரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதுவரை 20 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அதில் ஏராளமான சுடுமண் முத்திரைகள், சுடு மண்ணால் செய்யப்பட்ட உருவ பொம்மைகள், தீப விளக்குகள், பெண்கள் அணியக்கூடிய ஆபரணங்கள், பெண்கள் நொண்டி விளையாட்டுக்கு பயன்படுத்திய வட்ட சில்லுகள், செப்புக்காசுகள், சூது பவளமணி ,ஏராளமான மண்பாண்ட பொருட்கள் உள்பட நான்காயிரத்திற்க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில் கூடுதலாக இரண்டு கட்ட அகழாய்வில் பெண்கள் அணியக்கூடிய சுடுமண் காதணி உடைந்து நிலையில் கண்டெடுக்கப்பட்டது. ஆனால், தற்போது முதன்முறையாக சுடுமண் காதணி சேதம் அடையாமல் முழுமையாக கிடைத்துள்ளது. மேலும் கண்ணாடி மணிகளும் கிடைத்துள்ளது. இதுகுறித்து தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது முகநூலில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.

தமிழரின் வரலாற்றைத் தாங்கிப்பிடிக்கும் வெம்பக்கோட்டை நம் தமிழரின் மரபையும் பெருமையையும் பறைசாற்றும் விதமாக திகழ்ந்து வருகிறது. வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜய கரிசல்குளத்தில் அகழாய்வுப் பணிகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், முன்னதாக உடைந்த நிலையில் கிடைத்த காதணி தற்போது முழுமையாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது சுடுமண்ணால் செய்யப்பட்டுள்ளது என்பது கூடுதல் சிறப்பாகும்.

அதுமட்டுமின்றி கலை நயத்துடன் அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல் உடைந்த நிலையில் கிடைக்கப்பெற்றுள்ளது. புகைப்படத்தில் இருக்கும் கண்ணாடி, சுடுமண்ணால் செய்யப்பட்ட பைக் கோன் என்று சொல்லக்கூடிய இருமுனை கூம்பு வடிவில் கண்டறியப்பட்டுள்ளது‌. மேலும், மணிகளும் பல கிடைக்கப்பெற்றுள்ளன என்பது, பல்லாயிரம் ஆண்டு முன்பு வாழ்ந்த தமிழரின் வரலாற்று வாழ்வியல் தடயங்களைக் காட்டுகிறது. என குறிப்பிட்டுள்ளார்.