• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களுடன் அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை

Byவிஷா

Feb 24, 2025

அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களுடன் அமைச்சர்கள் குழு இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என வாக்குறுதி அளித்த திமுக, இதுவரை நிறைவேற்றாததை கண்டித்தும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் தொடர் போராட்டங்களை அறிவித்து உள்ளன.
இதையடுத்து, அவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து முடிவு காண, அமைச்சர்கள் குழுவை அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த குழுவினர், அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
மாநில அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் கடந்த 2003 ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு, மத்திய அரசு ஊழியர்களுக்கு தேசிய ஓய்வூதிய திட்டம் கடந்த 2004 ஜனவரி 1-ம் தேதி அமல்படுத்தப்பட்டது. ஆனாலும், மாநில அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து பங்களிப்பு ஓய்வூதிய திட்டமே தொடர அனுமதிக்கப்பட்டது. இதனால், அதிருப்தி அடைந்த தமிழக அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் குறித்து கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, தமிழக அரசின் நிதிநிலை மற்றும் அரசு ஊழியர்களின் ஓய்வூதிய கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு, நடைமுறை சாத்தியம் உள்ள ஓய்வூதிய முறை குறித்து அரசுக்கு பரிந்துரை செய்ய, அதிகாரி கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து தமிழக அரசு இம்மாத தொடக்கத்தில் அரசாணை வெளியிட்டது.
இந்த குழுவில் ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ் கல்வி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் கே.ஆர். சண்முகம், நிதித் துறை துணை செயலரும், உறுப்பினர் செயலருமான பிரத்திக் தாயள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழு தனது விரிவான அறிக்கை மற்றும் பரிந்துரையை 9 மாதங்களுக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அவற்றின் மீது உரிய முடிவு காண, அமைச்சர்கள் அடங்கிய ஒரு குழுவை அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த குழுவில் அமைச்சர்கள் எ.வ.வேலு (பொதுப்பணி), தங்கம் தென்னரசு (நிதி), அன்பில் மகேஸ் (பள்ளிக்கல்வி), கயல்விழி செல்வராஜ் (மனிதவளம்) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து சங்க நிர்வாகிகளுடன் சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர்கள் குழு இன்று (பிப்.24) பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்.

இவ்வாறு தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.