• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அறிவாலயத்தில் இருந்து ஒரு புல்லைக்கூட பிடுங்க முடியாது – அண்ணாமலைக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி

ByP.Kavitha Kumar

Feb 13, 2025

அண்ணா அறிவாலயத்தில் இருந்து அண்ணாமலையால் ஒரு புல்லைக் கூட பிடுங்க முடியாது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

சென்னையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்போது, தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி மலர்ந்தே தீரும் என்று அண்ணாமலை கூறியிருப்பது குறித்த கேள்விக்கு, அது அவரது கற்பனை என்று ஆர்.எஸ்.பாரதி பதிலளித்தார். அண்ணா அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் உருவி எடுத்து விட்டுத்தான் போவேன் என்று அண்ணாமலை கூறியுள்ளது குறித்து கேட்ட கேள்விக்கு, , “அண்ணா அறிவாலயத்தில் இருக்கிற ஒரு புல்லைக் கூட அண்ணாமலையால் பிடுங்க முடியாது. தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமையும் என்பது நிச்சயமாக ஒரு கற்பனை, அது நடக்கவே நடக்காது என்பது ஊரறிந்த உண்மை” என்று அவர் பதிலளித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொய் சொல்வதாக அண்ணாமலை கூறியது குறித்த கேள்விக்கு, ஒரே மேடையில் விவாதிக்க நாங்கள் தயார். எங்களுடன் விவாதிக்க அண்ணாமலை தயாரா என்று ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பினார். அப்போது அதிமுக குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அதிமுகவைப் பற்றி கேட்க வேண்டாம். ஏனென்றால் அவர்களே பாவம் நெருக்கடியில் இருக்கிறார்கள். அதிமுகவில் இருக்கும் யாரைப் பற்றியும் நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை” என்று கூறினார். நடிகர் விஜய்க்கு 15 முதல் 20 சதவீத வாக்கு வங்கி இருப்பது குறித்த கேள்விக்கு, பதிலளிக்க விரும்பவில்லை என்று கூறிய ஆர்.எஸ்.பாரதி, பிரசாந்த் கிஷோர் குறித்த கேள்விக்கு, “பீகாரிலேயே அவர் டெபாசிட் வாங்கவில்லை” என்று பதிலளித்தார்.