மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள பாலதண்டாயுத சுவாமி கோயில் திருப்பணிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கிய 8 லட்ச ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
மதுரை நேதாஜி ரோட்டில் பாலதண்டாயுத சுவாமி திருக்கோயில் உள்ளது. பழமையான இக்கோயிலில் கும்பாபிஷேக திருப்பணி தற்போது நடைபெற்று வருகிறது இதில் பல லட்ச ரூபாய் மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் ஊழல் செய்த பணத்தை ரகசியமாக அறநிலையத்துறை வசூலித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை நேதாஜி ரோடு பாலதண்டாயுத சுவாமி திருக்கோயிலின் கும்பாபிஷேக திருப்பணி சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. இதற்கு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், முன்னாள் வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் சுமார் 8 லட்ச ரூபாய் நன்கொடை கொடுத்துள்ளார். அதே போல பலர், பல லட்ச ரூபாய் நன்கொடைகளைக் கொடுத்துள்ளனர். அத்துடன் மதுரையின் முக்கிய பிரமுகர்கள் திருப்பணிக்கான பெரும்பாலான செலவுகளை ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதை தனக்குச் சாதமாக்கிக் கொண்ட கோயில் முக்கிய பொறுப்பில் உள்ள ஊழியர்கள், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கிய 8 லட்ச ரூபாய் விவரத்தை செயல் அதிகாரி அங்கையற்கண்ணியிடம் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் மறைத்துள்ளார், இதற்கிடையே அங்கயற்கண்ணிக்கு ஒரு புகார் மனு வந்தது. அதில் ஊழியர்கள் பணத்தை சுருட்டிய விவரம் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து அவர் விசாரித்த போது ஒரு ஊழியர் கணக்கு விவரங்களை அரைகுறையாக காண்பித்ததோடு அட்வான்ஸ் வைத்திருப்பதாக தகவல் கூறியுள்ளார்.
இதையடுத்து பல லட்ச ரூபாய் மோசடி நடந்தது உண்மை எனத் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து எவ்வளவு தொகை கணக்கு காட்ட வேண்டுமோ அதற்கு ஈடாக பல மாதங்களாக ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது தற்போது இந்த மோசடி பணத்தில் கல் தளம், கோயில் கதவு அமைப்பு தருவதாக கோயில் ஊழியர் ஒருவர் உறுதியளித்துள்ளார் அப்பணி முடிந்ததும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. மேலும் பணமோசடி செய்த ஊழியர்கள் குறித்து போலீசில் புகார் செய்யாமல், மோசடி செய்த பணத்தை ரகசியமாக வசூல் செய்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
.
இது தொடர்பாக பாலதண்டாயுத சுவாமி கோயில் அதிகாரியிடம் கேட்டபோது, மோசடி நடந்தது குறித்து உபயோதாரர்களுக்கு தெரிந்தால் திருப்பணிகள் பாதிக்கப்படும் எனவும், கோயிலின் நற்பெயர் கெட்டுவிடும் எனவும் பணத்தை வசூலிக்கவும் முடியாது இதுகுறித்து உயர் அதிகாரி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
இதே கோயிலில் கடந்த 7-ம் தேதி அர்ச்சகர் தட்டில் விழும் காணிக்கையை உண்டியலில் செலுத்த செயல் அலுவலர் உத்தரவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து அரசியல் டுடே இணையதளச் செய்தியில் நேரடியாக அமைச்சருக்கே தொலைபேசி வாயிலாக இது சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் இது தொடர்பான செய்தியும் வெளியிடப்பட்டது. இந்த செய்தி வெளியான சில மணி நேரத்திலேயே காணிக்கை வசூல் உத்தரவை ரத்து செய்வதாக இணை ஆணையாளர் செல்லதுரை சுற்றறிக்கை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.










