ஒரு மனிதன் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருந்தால், அதுவே முழுமையான ஆரோக்கியம் என்று அழைக்கப்படுகிறது. மனநலம் ஆரோக்கியமாக இருக்க மனம் அமைதியாகவும், பதட்டமில்லாமலும் இருக்க வேண்டும். அதற்கு நாம் உண்ணும் உணவும் முக்கிய காரணம்.
உடல் ஆரோக்கியத்திற்கு மன ஆரோக்கியம் என்பது மிக முக்கியம். அதேபோல் மன ஆரோக்கியத்திற்கு உடல் ஆரோக்கியம் என்பது முக்கியம். சரிவிகித உணவை எடுத்துக் கொண்டால் மட்டுமே ஆரோக்கிய நன்மைகளை அடைய முடியும். உணவுமுறை மனநலத்தையும் நேரடியாகப் பாதிக்கும். அதற்கான உணவு முறை குறித்து அறிந்துக் கொள்வோம்.
மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள்
முதலில் சர்க்கரை, பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிர்பானங்கள் உள்ளிட்டவைகளைத் தவிர்க்க வேண்டும். காரணம் இவை பதட்டத்தை பெருமளவு அதிகரிக்கும். அதேபோல் ஆல்கஹால், காபி மற்றும் புகையிலை ஆகியவை உங்களுக்கு ஊக்கமளிப்பது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் இவை அனைத்தும் மிகவும் தீங்கு விளைவிக்கும். இது மன அமைதியை முற்றிலும் குழைக்கும்.
உணவில் போதுமான புரதம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். புரோட்டீன்கள் நரம்பியக்கடத்திகளை உருவாக்க உதவுகின்றன. இது மனநலத்தை மேம்படுத்த பெருமளவு உதவும். அதேபோல் பி வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது எரிச்சல் உணர்வை குறைக்கும். இது உங்களை அமைதியாக வைத்திருக்க உதவும்.
கீரைகள்
கீரையில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். எனவே, தினமும் கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கீரைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து, தாதுக்கள், ஆல்பா-லினோலிக் அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. வைட்டமின் கே கவலை மற்றும் மனச்சோர்வைக் குறைக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த கீரை, வெந்தயம் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பழங்கள் மற்றும் பெர்ரி

புதிய பழங்கள் மற்றும் பெர்ரிகளை சாப்பிடுவது மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. இவை நினைவு ஆற்றலை மேம்படுத்துகின்றன. மேலும் வயதான அறிகுறிகளை தாமதப்படுத்துகின்றன. பழங்களை உண்பவர்களுக்கு சிறந்த மன ஆரோக்கியம் இருப்பதாக ஆய்வுகள் காண்பிக்கின்றன. பெர்ரிகளில் மனநலத்தை மேம்படுத்தும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.
மீன் உணவு

மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒமேகா 3 மூளையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் நினைவாற்றல் இழப்பிலிருந்து பாதுகாக்கிறது. இது வயதான காலத்தில் அல்சைமர் போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.
நட்ஸ் வகைகள்

பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த மிகவும் நல்லது. நட்ஸ்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. மறுபுறம், பாதாமில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது, இது நினைவகத்தை மேம்படுத்த உதவுகிறது.
மன ஆரோக்கியத்தை மேம்படுத்த இதுபோன்ற உணவு முறைகளை கையாளுவது பெருமளவு உதவியாக இருக்கும்.








