• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பாஜக, இந்து முன்னணிக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம்

ByP.Kavitha Kumar

Feb 5, 2025

அரசியல் உள்நோக்கங்களுக்காக மக்களின் இறை நம்பிக்கையை தவறாக பயன்படுத்துகிற பாஜக மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட அதன் அமைப்புகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ மதுரை திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலையும், மலை உச்சியில் அமைந்துள்ள சிக்கந்தர் பாதுஷா தர்க்காவையும் மையப்படுத்தி மிகவும் தவறான உண்மைக்கு புறம்பான செய்திகளை முன்னிறுத்தி ‘முருகன் மலையை காக்க திருப்பரங்குன்றத்திற்கு வருக’ என்று தனது அரசியல் உள்நோக்கங்களுக்காக மக்களின் இறை நம்பிக்கையை தவறாக பயன்படுத்துகிற பாஜக மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட அதன் அமைப்புகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

இந்த அமைப்புகளின் பொய்ப்பிரசாரத்தை உணர்ந்து கொண்ட தமிழக மக்கள் இவர்களின் அழைப்பை முற்றிலுமாக புறக்கணித்து சரியான பாடம் புகட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமுற்ற மதவெறி சக்திகள் இன்று தமிழகத்தில் பல பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டின் பொது அமைதியையும், ஒற்றுமையையும் உயர்த்திப்பிடித்த அனைத்து பகுதி மக்களுக்கும், மதச்சார்பற்ற அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாக பொதுமக்களால் பின்பற்றப்பட்டு வரும் அனைத்து மத வழிபாட்டு முறைகளையும் உறுதிப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது”. எனக் கூறப்பிடப்பட்டுள்ளது.