உசிலம்பட்டியில் திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு செல்ல முயன்ற பாஜக மாநில நிர்வாகி வேலூர் இப்ராகிம் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பரங்குன்றம் மலை மீது காசி விசுவநாதர் கோவில் மற்றும் சிக்கந்தர் பாட்சா தர்கா உள்ளது., இந்த சிக்கந்தர் பாட்சா தர்காவிற்கு சென்ற இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி மலை உச்சியில் அசைவ உணவு உட்கொண்டதாக குற்றம் சாட்டி பாஜகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை மலை உச்சிக்கு செல்ல முயன்ற பாஜக சிறுபான்மையினர் அணி மாநில செயலாளர் வேலூர் இப்ராகிம்-யை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர்., தொடர்ந்து மலை உச்சிக்கு செல்ல முயன்ற மதுரை ஆதினம் மற்றும் அசைவ உணவுடன் மலை உச்சிக்கு செல்ல முயன்ற இஸ்லாமிய இளைஞர்களும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள சூழலில் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு மதுரை புறநகர் மாவட்ட பாஜக துணை தலைவர் தீபன் முத்தையா தலைமையிலான பாஜக நிர்வாகிகள், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அசைவ உணவு உட்கொண்டதாக குற்றம் சாட்டி அவருக்கு எதிராகவும், பாஜக சிறுபான்மையினர் பிரிவு மாநில செயலாளர் வேலூர் இப்ராகிம் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் தீடீரென கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எம்.பி. நவாஸ்கனிக்கு எதிராகவும், வேலூர் இப்ராகிம்-யை கைது செய்த காவல்துறைக்கு எதிராகவும் கண்டன கோசங்களை எழுப்பி பாஜக நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.








