பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மஞ்சள் அறுவடை பணிகள் விரைவில் தொடங்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையின்போது, பொங்கல் வைக்கும் பானையில் மஞ்சள் செடி மங்கல அடையாளமாக கட்டப்படுகிறது. மஞ்சள் கட்டப்பட்ட பானையில் பொங்கும் பொங்கல், அந்த வீட்டின் வளத்தை குறிப்பதாக கருதப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே சித்தரேவு, செங்கட்டாம்பட்டி ஆகிய கிராம பகுதிகளில் அதிக பரப்பளவில் மஞ்சள் கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த மஞ்சள் செடிகள் நன்கு வளர்ந்துள்ளன.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் வத்தலக்குண்டு பகுதியில் தற்போது மஞ்சள் செடிகள் அறுவடைக்கு தயாராக உள்ளன.
பொங்கலுக்கு முதல் தினம் இதை அதிக அளவில் மக்கள் வாங்குவார்கள் என்பதை, மனதில் வைத்து அறுவடை செய்ய ஆயத்த பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். பொங்கல் பண்டிகையின்போது விற்பனை அதிகரிக்கும் என்பதால், போதிய விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.
மஞ்சள் அறுவடை பணிகள் விரைவில் தொடக்கம்
