உசிலம்பட்டியில் பழமை வாய்ந்த நட்டாத்தி நாடார் சங்க நிர்வாகிகள் 20 ஆண்டுகளுக்கு பின் நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் மூலம் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது உசிலம்பட்டி நட்டாத்தி நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட கல்வி நிறுவனங்களின் பரிபாலன சபை.

பழமை வாய்ந்த இந்த சங்கத்தின் பள்ளிகளை கடந்த 1955 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் காமராஜ் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்ததாக கல்வெட்டுகள் உள்ளன.
இந்நிலையில் இச்சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் பல்வேறு காரணத்தால் கடந்த 20 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது, இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 11.06.2023 அன்று நிர்வாகிகளை தேர்வு செய்ய தேர்தல் நடைபெற்ற நிலையில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்பாக வாக்கு எண்ணிக்கை தேதி குறிப்பிடாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த பெரியகுளம் சார்பு நீதிமன்ற நீதிபதிகள், இன்று வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டனர், அதன்படி வாக்கு எண்ணிக்கை தேர்தல் ஆணையர் ஜெயபிரகாஷ் முன்னிலையில் இன்று நடைபெற்றது.

இந்த வாக்கு எண்ணிக்கை முடிவில் உசிலம்பட்டியைச் சேர்ந்த எஸ்.எம்.எஸ்.ஆர். நடராஜன் செயலாளராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட சூழலில், பிரகாஷ் கண்ணன் தலைவராகவும், பி.எஸ்.ஆர். நடராஜன், செல்வராஜ், ஜெயராமன், முனியப்பன் உள்ளிட்ட 7 நிர்வாக குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தின் ஆலோசனைபடி இச்சங்கத்தின் நிர்வாக குழு நிர்வாகிகளாக 20 ஆண்டுகளுக்கு பின் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் விரைவில் பதவி ஏற்பார்கள் என கூறப்படுகிறது.








