உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் பூட்டியே கிடப்பதால் பொதுமக்கள் அவதியுற்று வருவதாகவும், எம்எல்ஏ எங்கு சென்றார் என தெரியவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக ஓபிஎஸ் ஆதரவாளரான பி.அய்யப்பன் செயல்பட்டு வருகிறார். இவரது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் உசிலம்பட்டியின் மையப்பகுதியான சந்தை பகுதியில் அமைந்துள்ளது.

இந்நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பிருந்தே இந்த அலுவலகத்திற்கு உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் வருவதில்லை எனவும், சுமார் எட்டு மாதங்களுக்கும் மேலாக பூட்டியே கிடக்கும் இந்த அலுவலகம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதாக கூறப்படுகிறது.

எம்எல்ஏ – விடம் கோரிக்கை மனு அளிக்க வரும் பொதுமக்கள் அலுவலகம் பூட்டி கிடப்பதால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதாகவும், எம்எல்ஏ எங்கு சென்றார் என தெரியவில்லை என குற்றச்சாட்டு.
எம்எல்ஏ அலுவலகம் வரும் சாலை, பல்வேறு அரசு அலுவலகங்கள் நிறைந்த சந்தை பகுதி சுகாதாரமின்றி காணப்படுவதாகவும், காய்கறிகளை விற்க வரும் விவசாயிகள் நோய்களை வாங்கி செல்வதாகவும், அவரது அலுவலகம் உள்ள பகுதியில் உள்ள மக்களின் கோரிக்கைகளை எம்எல்ஏ செயல்படுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து உசிலம்பட்டி எம்எல்ஏ – அய்யப்பனிடம் கேட்ட போது எம்எல்ஏ அலுவலகம் சிதிலமடைந்த நிலையில் உள்ளதால் புதிய கட்டிடம் கட்டும் வரை தனது வீட்டில் அலுவலகம் அமைத்து மக்களிடம் மனுக்களை பெற்று வருவதாகவும், புதிய கட்டிடம் அமைந்தவுடன் சாலை உள்ளிட்ட அடிப்படை பணிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் தற்காலிகமாக வீட்டில் மனுக்களை பெற்று வந்தாலும், எம்எல்ஏ அலுவலகத்தில் எம்எல்ஏ-வை தொடர்பு கொள்ள பதாதைகள் மூலம் அறிவிப்பு செய்திருந்தால் மக்கள் ஏமாற்றமடைய வாய்ப்பில்லை என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.