சிறுவர்களுக்குப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு தேனி நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது.
தேனி மாவட்டம் வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் உலகநாதன் (34). இவர் கடந்த 6ஆம் தேதியன்று தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 7 மற்றும் 10 வயது சிறுவர்களை தூக்கிச் சென்று தனி இடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவர்களின் தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் வீரபாண்டி காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையானது தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணை முடிந்தது, சாட்சியங்களின் அடிப்படையில் இரண்டு சிறுவர்களை பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக குற்றவாளி உலகநாதனுக்கு போக்சோ சட்டப்பிரிவு 5(ஆ)ன் கீழ் 1 ஆயுள் தண்டனை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம், அதைக் கட்ட தவறினால் மேலும் 1 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, சட்டப்பிரிவு 5 (ப) 6ன் கீழ் குற்றத்திற்காக மேலும் 1 ஆயுள் தண்டனை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம், அதைக் கட்ட தவறினால் மேலும் 1 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை என இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கணேசன் தீர்ப்பு வழங்கியுள்ளார். இதன் அடிப்படையில், இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளி உலகநாதன் மதுரை மத்திய சிறையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு அடைக்கப்பட்டுள்ளார்.
சிறுவர்களுக்கு பாலியல் வன்கொடுமை: அதிரடி தீர்ப்பு
