• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சென்னையில் தொடர் மழை, வாகன ஓட்டிகள் அவதி

Byவிஷா

Oct 15, 2024

சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று காலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து மத்திய வங்க கடலில் நிலை கொண்டுள்ளது. இதைத் தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து புதுச்சேரி வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரை ஓரம் அடுத்த இரண்டு தினங்களில் நிலவக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையின் பல்வேறு இடங்களில் இரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. சென்னை எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், நுங்கம்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. ராயப்பேட்டை பகுதியில் கனமழை பெய்து வருவதால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். ராயப்பேட்டை மேஸ்திரி சாலையில் குட்டை போல் மழைநீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளான நிலையில், சாலையின் இருபுறமும் இறைச்சி கடைகள் இருப்பதால் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக தி.நகரின் பர்கித் சாலையில் ராட்சத மரம் விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். வியாசர்பாடி பகுதிக்கு உட்பட முல்லை நகர், எம்.கே.பி நகர், பெரம்பூர், நுங்கம்பாக்கத்தில் உள்ள கிருஷ்ணமா சாலை, ஜெகநாதன் ரோடு வடபழனி 100 அடி சாலை, திருமங்கலம் பிரதான சாலை, வேளச்சேரி, பள்ளிக்கரணை பகுதிகளில் மிக கனமழை பெய்து வருவதால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி உள்ளதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வேளச்சேரியில் உள்ள சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.