• Sat. Apr 27th, 2024

2 தரத்தில் ‘வலிமை’ சிமெண்ட் அறிமுகம்

Byமதி

Nov 16, 2021

2 தரத்தில் ‘வலிமை’ சிமெண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

தமிழகத்தில் சிமெண்ட் விலையை கட்டுப்படுத்த அரசு சார்பில் ’வலிமை’ சிமெண்ட் தயாரித்து விற்கப்படும் என்ற அறிவிப்பை தொழில்துறை வெளியிட்டது. அதன்படி, வலிமை சிமெண்ட்டை முதல்வர் இன்று அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

வலிமை சிமெண்ட் விற்பனை குறித்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, ’’தனியார் நிறுவனங்களின் சிமெண்ட் வெளி சந்தைகளில் 420 முதல் 490 ரூபாய் வரை விற்கப்படும் நிலையில், தனியார் நிறுவனங்களுடன் போட்டி போட்டு பொதுமக்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில் விளம்பர உத்திகளை கையாளவும் அரசு திட்டமிட்டுள்ளது.

ரூ.325 மற்றும் ரூ.350 என 2 தரத்தில் வலிமை சிமெண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது தரத்தில் எந்த குறைவும் இல்லாமல், அதேசமயம் அனைவரும் வாங்கி பயன்படுத்தக்கூடிய விலையில் தமிழ்நாட்டு மக்களின் நலன்கருதி அறிமுகப்படுத்தியுள்ளோம். வலிமை சிமெண்ட் விலையுடன் கூடுதலாக ரூ.35 போக்குவரத்து செலவும் இதில் அடங்கும். தற்போதைய மூலப்பொருட்களின் விலை அடிப்படையில் சிமெண்ட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 30 ஆயிரம் மெட்ரிக் டன் சிமெண்ட் உற்பத்தி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப பின்னர் உற்பத்தியின் அளவு அதிகரிக்கப்படும். இந்த சிமெண்ட் அரசு கட்டுமானப் பணிகளுக்கு மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கும் கிடைப்பதை உறுதிசெய்யவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்’’ என்று கூறினார்.

சிமெண்ட் விலையை தனியார் நிறுவனங்களுக்கு மட்டுமே நிர்ணயித்து வரும் நிலையில், அரசு சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வலிமை சிமெண்ட் விற்பனை மூலம் தனியார் நிறுவனங்களின் சிமெண்ட்டின் விலையும் கணிசமாக குறையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *