நற்றிணைப்பாடல்: 391
ஆழல், மடந்தை! அழுங்குவர் செலவே புலிப் பொறி அன்ன புள்ளி அம் பொதும்பின் பனிப் பவர் மேய்ந்த மா இரு மருப்பின் மலர் தலைக் காரான் அகற்றிய தண் நடை ஒண் தொடி மகளிர் இழை அணிக் கூட்டும் பொன் படு, கொண்கான நன்னன் நல் நாட்டு ஏழிற்குன்றம் பெறினும், பொருள்வயின் யாரோ பிரிகிற்பவரே - குவளை நீர் வார் நிகர் மலர் அன்ன, நின் பேர் அமர் மழைக் கண்தெண் பனி கொளவே?
பாடியவர்: பாலை பாடிய பெருங்கடுங்கோ திணை :பாலை
பொருள்:
மடந்தாய்! குவளையின் நீர் வடிகின்ற ஒளி பொருந்திய மலர் போன்ற நின்னுடைய பெரிய அமர்த்தலையுடைய குளிர்ச்சியுற்ற கண்களிலே தெளிந்த நீர் வடியும்படி நீ அழாதேகொள்! அழுவதனை அறிந்தால் அவர் பொருள் கொணருமாறு செல்லுவதனை இன்னே ஒழிகுவர்காண்; புலியினது புள்ளி போன்ற புள்ளிகளமைந்த நிழலையுடைய மரங்கள் செறிதலினிடையே; படர்ந்த ஈரிய கொடியை மேய்ந்த நெடிய கரிய கொம்பையும் பருத்த தலையையுமுடைய எருமைமாடு; அக்கொடியினின்று தின்றொழித்த மலைப்பச்சையின் இலைகள் ஒள்ளிய தொடியையுடைய மகளிர் கலன்களை அணிதற்குப் பயன்படுமாறு கூட்டாநிற்கும்; கொண்கானத்தின்கணுள்ள நன்னனது நல்ல நாட்டிலிருக்கின்ற பொலிவு பொருந்திய ஏழில் மலையைத் தாம் பெறுவதாயினும்; நின்னைவிட்டுப் பிரிபவர் யார்?