• Sun. Nov 2nd, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

மத்திய இடைக்கால பட்ஜெட் : முக்கிய அம்சங்கள்

Byவிஷா

Feb 1, 2024

நாடாளுமன்றத்தில் 6வது முறையாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்..,
பட்ஜெட்டை தாக்கல் செய்த பின் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆற்றிய உரை,
“2014-ம் ஆண்டுக்கு முன் நாடு பல்வேறு சவால்களை சந்தித்தது. நாடு பெரும் சவால்களை சந்தித்த நேரத்தில் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி 2014-ல் பொறுப்பேற்றது.

 கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் நேர்மறையான மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. சமூக அடிப்படையிலும் புவியியல் அடிப்படையிலும் மேம்பாட்டு திட்டங்களை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது.நாட்டு மக்கள் புதிய நம்பிக்கையை பெற்றுள்ளனர்.

 மக்கள் மீண்டும் பாஜக ஆட்சியை தேர்ந்தெடுப்பார்கள் என நம்புகிறோம். ரேஷனில் இலவச உணவுப்பொருள் கொடுத்ததன் மூலம் உணவுக்கான கவலையை போக்கிவிட்டோம். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை திட்டமிட்டு செயல்படுத்துகிறோம்.

 விவசாயிகள், ஏழைகள் என மக்கள் நலத் திட்டங்கள் மூலம் 10 ஆண்டுகளில் ரூ.34 லட்சம் கோடி மானியம் சென்றடைந்துள்ளது

 நாட்டின் வளர்ச்சி அனைத்து மக்களையும் நேரடியாக சென்றடையும் வகையில் நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.ஆத்ம நிர்பர் பாரத் திட்டம் மூலம் அனைத்துத்துறைகளிலும் நாடு தன்னிறைவு பெற்று முன்னேறி வருகிறது.

 மதச்சார்பின்மையை மக்களுக்கான அரசின் திட்டங்கள் மூலம் மோடி அரசு செயல்படுத்தி வருகிறது.சாதி, மத வேறுபாடுகள் இன்றி, திட்டங்களின் பயன்கள் அனைவரையும் நேரடியாக சென்றடைகின்றன.

 2047-ல் வளர்ச்சி பெற்ற புதிய இந்தியா உருவாகும். பா.ஜ.க. அரசின் இலக்காக சமூகநீதி உள்ளது. 4 முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்துவதே அரசின் நோக்கம். வறுமை ஒழிப்பு, மகளிருக்கு அதிகாரம், இளைஞர்களுக்கு வாய்ப்பு, அனைவருக்கும் உணவு வழங்குவதே நோக்கம்.

 25 கோடி மக்களை வறுமையில் இருந்து பாஜக அரசு மீட்டுள்ளது. நேரடியாக வங்கிகள் மூலம் பயனாளிகளுக்கு நிதி வழங்கியதால் அரசுக்கு ரூ.2.7 லட்சம் கோடி மிச்சம் ஏற்பட்டுள்ளது.

 11.8 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக உதவித்தொகை வழங்கப்படுகிறது. 78 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

 முத்ரா திட்டத்தின் கீழ் 43 கோடி முறை வங்கிக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.பெண்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் 30 கோடி முறை கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. தொழில்முனைவாராகும் பெண்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 28மூ உயர்ந்துள்ளது.

 குறைந்தபட்ச ஆதரவு விலை குறிப்பிட்ட கால அவகாசத்தில் உரிய முறையில் உயர்த்தப்பட்டு வருகிறது

 திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 3,000 தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. திறன் மேம்பாட்டு பயிற்சி மூலம் 54 லட்சம் இளைஞர்களின் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது. சிறந்த நிர்வாகம் மற்றும் திட்டங்கள் மூலம், இந்திய இளைஞர்களிடம் பணித்திறனுக்கான நம்பிக்கை அதிகரித்துள்ளது. 1.4 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

 விளையாட்டுத்துறையில் இந்தியா பதக்கங்களை குவித்து வருகிறது. 80 கிராண்ட் மாஸ்டர்கள் இந்தியாவில் உள்ளனர். 2010-ல் 20-ஆக இருந்த கிராண்ட் மாஸ்டர்கள் எண்ணிக்கை தற்போது 80 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.
 நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. உலகம் முழுவதும் பணவீக்கம், வட்டிவிகிதம் அதிகமாக உள்ளது.
 தொழில்வளர்ச்சி குறைவாக உள்ள சோதனையான சூழல் உள்ளது. உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி நிலவியபோதும் இந்தியா அதனை வெற்றிகரமாக கையாண்டு கடந்து வந்தது.

 இந்தியாவில் வளர்ச்சிக்கான முன்னேற்றத்துக்கான வாய்ப்புகளுக்கு வானமே எல்லை. கொரோனா பரவலுக்கு பின் உலக நாடுகளின் வரிசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் பணவீக்கம் அதிகமாக இருந்தபோதும் ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தோம்.

 சிறு, நடுத்தர குறுந்தொழில்கள் வளர்ச்சி அடைந்து உலக அளவில் போட்டியிடும் வகையில் மேம்பட்டுள்ளன. அடுத்த 5 ஆண்டுகள் என்பது வளர்ச்சிக்கான காலமாக இருக்கும். இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற அடுத்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

 நாட்டில் விலைவாசி கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பெண்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் முத்தலாக் தடைச்சட்டங்களால் மகளிர் பயனடைந்துள்ளனர். அனைவரையும் அரவணைக்கும் அரசாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. பெண்கள் உயர்கல்வி பயில்வது 10 ஆண்டுகளில் 28சதவீதம் அதிகரித்துள்ளது.

 கல்வித்துறையில் சீர்திருத்தங்களை புதிய தேசிய கல்வி கொள்கை மூலம் செயல்படுத்தி வருகிறோம்.
 10 ஆண்டுகளில் 7 ஐஐடி.கள், 15 எய்ம்ஸ், 390 பல்கலைக்கழகங்கள் நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

 மாநிலங்களுடன் ஆலோசித்து அடுத்த தலைமுறை பொருளாதார சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.

 ஒரு கோடி வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் திட்டம் அமல்படுத்தப்படும். சோலார் மின் வசதி ஏற்படுத்தி உற்பத்தி செய்யும் வீடுகளுக்கு முதல் 300 யூனிட்டுகள் இலவசமாக வழங்கப்படும்.

 பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 3 கோடி குடும்பங்களுக்கு வீடு கட்டித்தரப்பட்டுள்ளன.அடுத்த 5 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள் கட்டப்படும்.

 நாடு முழுவதும் மருத்துவக்கல்லூரிகள் அமைப்பது தொடர்பாக தனிக் குழு அமைக்கப்படும்.ஏற்கனவே உள்ள மருத்துவமனைகளில் புதிதாக மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்படும்.

 மகப்பேறு திட்டங்கள், குழந்தை நலத் திட்டங்கள் ஒரே தலைப்பின் கீழ் கொண்டு வந்து செயல்படுத்தப்படும். தடுப்பூசி போடும் திட்டங்கள் இந்தியா முழுமைக்கும் செயல்படுத்தப்படும். ஆயுஷ்மான் காப்பீடு திட்டம் அங்கன்வாடி ஊழியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

 வேளாண்துறையில் அரசு மற்றும் தனியார் துறைகள் கூடுதல் முதலீடு செய்வது ஊக்குவிக்கப்படும்.
 வேளாண் விளைபொருள், அறுவடைக்கு பிந்தையை நடவடிக்கைகளுக்கு கூடுதல் முதலீடுகள் மேற்கொள்ளப்படும்.பிரதமரின் விவசாய திட்டத்தின் கீழ் 38 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

 விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும். யூரியாவைத் தொடர்ந்து டி.ஏ.பி. உரங்களிலும் நானோ தொழில்நுட்பம் கொண்டுவரப்படும்.4 கோடி விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

 அறுவடைக்கு பின் விளைபொருட்களை பாதுகாக்க, மதிப்புக்கூட்டு பொருட்களை உருவாக்க சந்தைப்படுத்த திட்டம் வகுக்கப்படும்

 மின்சார வாகனங்கள் உற்பத்தி, பயன்பாட்டை ஊக்குவிக்க ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகிறது. நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி சார்ஜிங் மையங்கள் அதிகரிக்கப்படும்.

 பால் உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும்

 9-14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை புற்றுநோயை தடுப்பதற்கான தடுப்பூசி போடப்படும். ஊட்டசத்து குறைபாடுகளை சரி செய்ய புதிய செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

 9 கோடி பெண்களை உறுப்பினராக கொண்டுள்ள 83 லட்சம் சுயஉதவிக் குழுக்கள் கிராமங்களில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் ஒரு கோடி பெண்கள்
 லட்சாதிபதியாகியுள்ளனர்.

 மீன்வளத்துறையில் 55 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். நாட்டில் 5 ஒருங்கிணைந்த மீன்வளப்பூங்காக்கள் அமைக்கப்படும். கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும்.கடல் உணவுப்பொருட்களின் ஏற்றுமதி 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகி உள்ளது.

 சரக்கு ரயில் போக்குவரத்துக்காக பிரத்யேகமாக வழித்தடங்கள் செயல்படுத்தப்படும்.

 இந்திய விமான நிறுவனங்கள் புதிதாக 1,000 விமானங்களை வாங்க ஆர்டர்கள் கொடுத்துள்ளன. இந்தியாவில் விமான போக்குவரத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில் விமான நிலையங்கள் மேம்படுத்தப்படும். உதான் திட்டத்தின் கீழ் 550 தடங்களில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.உதான் திட்டத்தின் கீழ் புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்.10 ஆண்டுகளில் விமான நிலையங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.

 40,000 ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயில் பெட்டிகளாக மாற்றப்படும். நாடுமுழுவதும் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். பெருநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களை விரிவுபடுத்த முன்னுரிமை அளிக்கப்படும்.

 தொழில் தொடங்க வட்டியில்லாக் கடன் வழங்குவதற்காக ரூ.1 லட்சம் கோடியில் புதிய நிதியம் அமைக்கப்படும். மாநிலங்களுக்கு வட்டியில்லாக் கடனாக ரூ.1.2 லட்சம் கோடி வழங்கப்படும்.

 திருத்தப்பட்ட வரி வருவாய் மதிப்பீடு ரூ.27.56 லட்சம் கோடி. நிதி பற்றாக்குறை – 5.8சதவீதம்மூ ஆகும்.

 பாதுகாப்புத்துறையில் முதலீடு 11.1சதவீதம் ஆக உயர்த்தி 11,11,111 கோடி ரூபாயாக அதிகரிக்கப்படும். பாதுகாப்புத்துறையில் முதலீடு மொத்த உள்நாட்டு வளர்ச்சியான ஜிடிபி.யில் 3.4சதவீதம் ஆக இருக்கும்.

 கடந்த 10 ஆண்டுகளில் மக்களின் உண்மையான சராசரி வருவாய் அதிகரித்துள்ளது.

 புதிய வருமான வரி திட்டத்தின் கீழ் ரூ.7.5 லட்சம் வருமானம் வரையில் விலக்கு அளிக்கப்படுகிறது. வருமான வரி செலுத்தும் அனைவருக்கும் நன்றி. இடைக்கால பட்ஜெட் என்பதால் வருமான வரி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. நேர்முக வரி, மறைமுக வரி என எந்த வரிவிதிப்பு முறையிலும் மாற்றம் இல்லை. வருமான வரி செலுத்துவோருக்கு ஏற்கெனவே நடைமுறையே தொடரும். வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 8 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 2.4 மடங்கு உயர்ந்துள்ளது.

 இறக்குமதி வரியிலும் எந்த மாற்றமும் இல்லை. பழைய வருமான வரி வழக்குகள் ரத்துசெய்யப்படும். இதனால் ஒருகோடி பேருக்கு பலன் பெறுவர்.வருமான வரி ரிட்டர்ன்ஸ் தற்போது 10 நாள்களில் வழங்கப்படுகிறது.

 2024 – 25 சந்தைகளில் இருந்து 11.75 கோடி கடனாக திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்புக்கான செலவு ரூ.11.11 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

 தொழில்நுட்பத்துறை சார்ந்த இளைஞர்களுக்கு இது பொற்காலம். தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத் திட்டங்களுக்கான ஆய்வுகளை மேற்கொள்ள ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 50 ஆண்டுகளுக்கு வட்டி இல்லாத கடன் திட்டமாக இது வழங்கப்படும்.

 3 பெரிய பொருளாதார ரயில்வே வழித்தடம் விரைவில் அமைக்கப்படும். அதன்படி ஆற்றல், கனிமம் மற்றும் சிமெண்ட் துறைகளுக்கான காரிடார் துறைமுக இணைப்பு காரிடார் அதிக போக்குவரத்து நிறைந்த இடங்களுக்கான காரிடார் ஆகியவை கொண்டுவரப்படும்.

 இந்தியாவில் அந்நிய முதலீடுகள் 596 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. கடந்த 10 வருடங்களில் 500 மில்லியன் டாலருக்கு அதிகமாக அந்நிய முதலீடுகள் இந்தியாவுக்கு வந்துள்ளது.

 மாலத்தீவு விவகாரத்தைத் தொடர்ந்து லட்சத்தீவில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.ஆன்மிக சுற்றுலா போன்றவை உள்ளூர் மக்களுக்கு சுயதொழில் முனைவுக்கு ஊக்கம் அளிக்கிறது.

 இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பா பொருளாதார காரிடார் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.ஜெய் ஜவான், ஜெய் கிசான், ஜெய் விஞ்ஞான் உடன் ஜெய் அனுசந்தான்(ஆராய்ச்சி) என்பதே மோடி அரசின் குறிக்கோள்.ஜூலையில் நாட்டின் வளர்ச்சிக்கான விரிவான திட்டங்கள் அறிவிக்கப்படும்.

 வரும் நிதியாண்டில் மத்திய அரசின் செலவு ரூ.44 லட்சம் கோடியாக இருக்கும். 2024-25ல் நாட்டின் நிதிப்பற்றாக்குறை 5.1சதவீதத்துக்குள் கட்டுப்படுத்தப்படும்.

 மக்கள் தொகை பெருக்கம் தொடர்பான டெமோகிராபி உள்ளிட்ட விவகாரங்களை ஆய்வு செய்வதற்காக குழு அமைக்கப்படும். இந்த குழு பரிந்துரைகளை வழங்கும்“இது இடைக்கால பட்ஜெட் என்பதால் இதில் அனைத்தையும் அறிவிக்க முடியாது. அடுத்த அரசு ஆட்சிக்கு வரும் வரை நாட்டை நடத்த இடைக்கால பட்ஜெட் உதவும்,” இவ்வாறு தெரிவித்து 57 நிமிட பட்ஜெட் உரையை நிர்மலா சீதாராமன் நிறைவு செய்தார்.