• Wed. Sep 24th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

காவேரி கூக்குரல் சார்பில் “லட்சங்களை கொட்டித் தரும் மரப்பயிர் சாகுபடி” பயிற்சி.., ஒரே நாளில் 6 மாவட்டங்களில் நடைபெறுகிறது…

ByKalamegam Viswanathan

Jan 4, 2024

தமிழகத்தில் மரம் சார்ந்த விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் “லட்சங்களை கொட்டித் தரும் மரப்பயிர் சாகுபடி” என்ற களப் பயிற்சியை காவேரி கூக்குரல் இயக்கம் ஒரே நாளில் 6 மாவட்டங்களில் நடத்த உள்ளது. கோயம்புத்தூர், திருவண்ணாமலை, தென்காசி, தர்மபுரி, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் இப்பயிற்சி ஜனவரி 7-ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது.

இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் கிளப்பில் இன்று (ஜன 4) காலை நடைபெற்றது. இதில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் தமிழக கள ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ்மாறன் அவர்கள் பங்கேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது..,

டிம்பர் மரங்கள் விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தையும், தற்போது எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வாகவும் இருப்பதால் காவேரி கூக்குரல் இயக்கம் மரம் சார்ந்த விவசாயத்தை மேற்கொள்ள விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் தமிழக அளவில் பிரபலமாக உள்ள மரப் பண்ணைகளில் களப் பயிற்சிகளை நடத்தி வருகிறது. தற்போது உள்ளூர் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மண்டல அளவிலான பயிற்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. விவசாயிகள் இதில் பங்கு பெறுவதன் மூலம் தங்கள் ஊருக்கு அருகில் உள்ள பண்ணையை பார்வையிட்டு, தங்கள் பகுதியில் நன்றாக வளரக்கூடிய மரங்களை பற்றி தெரிந்து கொள்ள முடியும்.

அந்த வகையில், தற்போது மண்டலவாரியான பயிற்சிகள் கோயம்புத்தூர், திருவண்ணாமலை, தென்காசி, தர்மபுரி, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. பயிற்சியில் அந்தந்த பகுதி முன்னோடி மர விவசாயிகள் மற்றும் களப் பணியாளர்கள் மர சாகுபடி குறித்து விளக்குவார்கள். மேலும், மர விற்பனை, சந்தை வாய்ப்புகள் குறித்தும் விளக்கம் அளிப்பார்கள்.

பயிற்சியைத் தொடர்ந்து காவேரி கூக்குரல் களப் பணியாளர்கள் உங்கள் நிலத்திற்கு நேரடியாக வந்து மண்ணுக்கேற்ற மரங்களை தேர்ந்தெடுக்க ஆலோசனைகளும் வழங்குவார்கள். எனவே இம்மாவட்டங்களை சுற்றியுள்ள விவசாயிகள் இப்பயிற்சியில் கலந்துகொண்டு பயன்பெறலாம். விருப்பம் உள்ள விவசாயிகள் 94425 90079, 94425 90081 என்ற எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், மர விவசாயம் செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையம் காவேரி கூக்குரல் இயக்கம் வழங்குகிறது. தமிழகம் முழுவதும் உள்ள 40 ஈஷா நாற்றுப் பண்ணைகளில் விவசாயிகளுக்கு 3 ரூபாய்க்கு குறைந்த விலையில் டிம்பர் மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. தேக்கு, மலைவேம்பு, கருமருது, வேங்கை, மஞ்சள் கடம்பு, சந்தனம், செஞ்சந்தனம், குமிழ், மகாகனி போன்ற மரக்கன்றுகள் 20 -25 ஆண்டுகளில் விலை மதிப்பு மிக்க டிம்பர் மரமாக முதிர்ச்சி அடைந்து நல்ல விலையை ஈட்டித்தரும். கூடுதல் வருமானத்திற்கு மிளகு சாகுபடியும் செய்யலாம். மரம் நடவு செய்து 3 ஆண்டுகளில் மிளகு கன்றுகளை மரத்தில் ஏற்ற முடியும். இதனால் விவசாயிகள் வருடந்தோறும் வருமானம் பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.