• Mon. May 6th, 2024

நாளை தமிழகம் முழுவதும் தோழி விடுதிகள் திறப்பு..!

Byவிஷா

Jan 3, 2024

தமிழகம் முழுவதும் நாளை தோழி விடுதிகளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
கிராமங்களில் இருந்து நகரங்களில் தங்கி பணிபுரியும் பெண்களுக்காக குறைந்த கட்டணத்தில் தோழி விடுதிகள் தொடங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். இதற்கேற்ப அமைக்கப்பட்டுள்ள தோழி விடுதிகளை நாளை (ஜனவரி 4ம் தேதி) முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்த விடுதிகளில் 24 மணி நேரமும் பாதுகாப்பு வசதி, பார்க்கிங் வசதி, பயோமெட்ரிக் வசதி, இலவச வைஃபை உட்பட பல அம்சங்கள் நிறைந்துள்ளன. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnwwhcl.in என்ற இணையதளத்தின் மூலம் அனைத்து விவரங்களையும் அறியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
பெண்களை வேலைக்கு செல்ல ஊக்குவிக்கவும், பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில், பணிபுரியும் மகளிருக்கான அரசு விடுதிகள் திட்டம் மிக முக்கியமானதாக உள்ளது. நம்பகமான மற்றும் வசதியான தங்குமிடங்கள் கிடைப்பதை இந்த திட்டம் உறுதி செய்கிறது. இந்த திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் பணிபுரியும் பெண்களுக்கு 28 அரசு விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த 1975ம் ஆண்டு முதல், மத்திய, மாநில அரசு நிதியுதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. குடும்பத்தை விட்டு வெளியூரில் பணிபுரியும் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பெறும் மகளிருக்கு உணவுடன் பாதுகாப்பான தங்கும் வசதி அமைத்துக் கொடுப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள்: மாத வருமானம் சென்னையில், ரூ.25,000ஃ-த்திற்குள்ளும், இதர மாவட்டங்களில் ரூ.15,000ஃ-த்திற்குள்ளும் இருத்தல் வேண்டும்.
மூன்றாண்டுகள் விடுதியில் தங்கலாம். மூன்றாண்டுகளுக்கு மேல், பயனாளியின் தேவை, தங்கிப் பயிலும் காலத்தில் நடந்துகொண்ட விதம் ஆகியவற்றின் அடிப்படையில் காப்பாளரின் பரிந்துரையின்பேரில் நீட்டிக்கப்படும். சென்னையில் மாதமொன்றுக்கு  வாடகையாக 300 ரூபாய் செலுத்த வேண்டும்.  இதர மாவட்டங்களில் 200 ரூபாயும் செலுத்த வேண்டும். உணவு மற்றும் மின் கட்டணம் பகிர்ந்து  கொள்ள வேண்டும். எங்கெல்லாம் விடுதி உள்ளது: சென்னையில் 7 அரசு விடுதிகளும், காஞ்சிபுரத்தில் 3 அரசு விடுதிகளும்,  திருச்சியில் 2 விடுதிகளும்  உள்ளன. கோவை, சிவகங்கை, தூத்துக்குடி, கடலூர், தஞ்சாவூர், திருப்பூர், திருவள்ளூர், விழுப்புரம், வேலூர், திருநெல்வேலி, சேலம், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் தலா ஒரு விடுதிகள் ஏற்கனவே செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *