• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அயோத்தியில் புதிய விமானநிலையம் திறப்பு..!

Byவிஷா

Dec 30, 2023

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையம், நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட ரெயில் நிலையம், விரிவு படுத்தப்பட்ட சாலைகள் உள்ளிட்டவற்றை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
அயோத்தி நகரில் ரூ.11,100 கோடி மதிப்பில் பணி நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைப்பதோடு, புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவுள்ளார். இதே போல், உத்தரப்பிரதேசத்தின் இதர பகுதிகளில் ரூ.4,600 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்படவுள்ளன.
அயோத்தியின் வளமான பாரம்பரியம் மற்றும் வரலாறு மாறாமல், அங்கு உலகத் தரத்தில் உள் கட்டமைப்புகளை உருவாக்குவதும், போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதும், குடிமை வசதிகளை மறுசீரமைப்பதும் பிரதமரின் தொலைநோக்கு பார்வையாகும். ரூ.1,450 கோடிக்கும் மேற்பட்ட செலவில் அயோத்தியில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள விமான நிலையத்தின் முதல் பகுதியை இன்று (சனிக்கிழமை) பிரதமர் திறந்து வைக்கவுள்ளார். இந்த விமான நிலையத்துக்கு ராமாயணம் எழுதிய வால்மீகி பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதே போல், அயோத்தி கோவில் சந்திப்பு என்ற பெயருடன் ரூ.240 கோடிக்கும் மேற்பட்ட செலவில் மேம்படுத்தப்பட்டுள்ள அயோத்தி ரெயில் நிலையத்தையும் அவர் திறந்து வைக்கிறார். நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கிகள், உணவு அரங்குகள், பூஜைப் பொருள் கடைகள், ஓய்வறைகள், குழந்தை பராமரிப்பு அறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் இந்த ரெயில் நிலையம் மேம்படுத்தப்பட்டுள்ளது.