• Thu. Dec 25th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வீட்டுப்பாடம் எழுதாத மாணவியின் கையை முறித்த ஆசிரியை..!

Byவிஷா

Oct 14, 2023

அரசு பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவி வீட்டுப்பாடம் செய்யவில்லை என்பதற்காக ஆசிரியை சரமாரியாக தாக்கியதில் எட்டாம் வகுப்பு மாணவியின் கை முறிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் ஆற்றுப்பாதை தெருவில் வசித்து வருபவர்கள் செந்தில் – மாலா தம்பதியினர். இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து தன் குடும்பத்தை காப்பாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 13 வயதில் ஒரு பெண் பிள்ளையும் 7 வயதில் ஒரு ஆண் மகனும் உள்ளனர். இந்நிலையில் மாலாவின் 13 வயது மகள் சங்கராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் நிலையில் வியாழக்கிழமை காலை வழக்கம் போல பள்ளிக்கு சென்றுள்ளார். அப்பள்ளியில் உள்ள அறிவியல் ஆசிரியை செல்வாம்பிகை எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவியை வீட்டுப்பாடம் சரியாக செய்யவில்லை என்பதற்காக இரும்பு ஸ்கேலால் சரமாரியாக அடித்துள்ளார். மேலும், மாணவியை சக மாணவிகள் முன்பு அசிங்கமாகவும் அநாகரிகமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும், “நான் உன்னை அடித்ததையும், திட்டியதையும் உன் பெற்றோரிடம் கூறினால் அறிவியல் பாடப்பிரிவில் உன்னைப் பெயில்லாக்கி விடுவேன்” என்று மாணவியை மிரட்டி உள்ளார்.
ஆசிரியை செல்வாம்பிகை அடித்ததில் எட்டாம் வகுப்பு மாணவிக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் மாணவி துடிதுடித்து வலியில் அழுது கொண்டே இருந்த நிலையிலும் கூட மாணவிக்கு சிகிச்சை அளிக்காமல் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் அலட்சியம் காட்டியுள்ளனர், அரசு பள்ளி ஆசிரியர்கள். மாலை 6 மணி ஆகியும் மாணவி வீட்டிற்கு வரவில்லை என்று, அவரது தாய் மாலா சங்கராபுரம் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று பார்த்தபோது, மாணவி வலியில் துடிதுடித்தபடியே அழுது கொண்டிருந்தார். அவரை பார்த்து அதிர்ந்து போன அவரது தாய், சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் மாணவியை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளார்.

அரசு பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவி வீட்டுப்பாடம் செய்யவில்லை என்பதற்காக ஆசிரியை சரமாரியாக தாக்கியதில் எட்டாம் வகுப்பு மாணவியின் கை முறிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மாணவியின் தாயார் மாலா கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது போன்ற ஆசிரியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.