சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 107 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.
2023 ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடர் சீனாவின் ஹாங்சோ நகரத்தில் நடைபெற்றது. பிரமாண்டமாக நடந்த இந்த தொடரில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு ஆசிய நாடுகள் பங்கேற்றன. இந்தியா முதல் நாளில் இருந்தே பதக்கங்களை வென்று குவிக்கத் துவங்கியது. செப்டம்பர் 23 தொடங்கி அக்டோபர் 8 வரை நடந்த இந்த தொடரில் இந்தியா முதல்முறையாக 100 பதக்கங்கள் என்ற மைல்கல்லை தாண்டி இருக்கிறது. அக்டோபர் 7 அன்றே தனது கடைசி ஆட்டத்தில் ஆடி முடித்த இந்தியா 107 பதக்கங்களுடன் இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியை நிறைவு செய்தது.
கடந்த 2018ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 70 பதக்கங்கள் வென்று இருந்ததே பெரிய சாதனையாக இருந்தது. அதை முறியடித்து இந்த முறை அதை விட 37 பதக்கங்கள் கூடுதலாக வென்று அசத்தி இருக்கிறது இந்தியா. இந்த வெற்றிகளுடன் இந்தியா பதக்கப் பட்டியலில் நான்காம் இடத்தில் இருக்கிறது. இந்தியா 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் வென்று இருக்கிறது. சீனா வழக்கம் போல ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதல் இடத்தில் இருக்கிறது. அந்த நாடு 200 தங்கம், 111 வெள்ளி, 71 வெண்கலம் வென்றுள்ளது. மொத்தம் 382 பதக்கங்கள் வென்று இரண்டாம் இடத்தில் இருக்கும் ஜப்பானை விட 196 பதக்கங்கள் அதிகம் வென்று மிரட்டி இருக்கிறது சீனா.
ஆசிய விளையாட்டு போட்டியில் புதிய சாதனை படைத்த இந்தியா..!
