• Sun. May 19th, 2024

2024ல் பயன்பாட்டுக்கு வரும் சென்னை – பெங்களூரு அதிவிரைவுச் சாலை..!

Byவிஷா

Sep 8, 2023

சென்னை – பெங்களூரு செல்லும் அதிவிரைவுச் சாலை இந்த ஆண்டு இறுதிக்குள் பணி முடிந்து, 2024ல் பயன்பாட்டுக்கு வரும் என மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தலைநகர் சென்னையில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு சுமார் 350 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த இடத்துக்கு சாலை மார்க்கமாக செல்ல குறைந்தது 6மணி நேரம் வரை பயணிக்க வேண்டியுள்ளது. இதற்கு காரணம் மோசமான சாலை மற்றும் போக்குவரத்து நெரிசல். ஆனால், ரெயின்மூலம் சென்றாலும் அதிவிரைவு ரயில்களில் 4மணி நேரமும் சாதாரண ரயில்களிலும் 6மணி நேரமும் ஆகியது.
இதனைத் தவிர்க்கவே, மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலைகளில் புதிய சாலை திட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக சென்னை முதல் பெங்களூரு வரை அதிவிரைவு சாலைதிட்டம் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதன் திட்ட மதிப்பீடு சுமார் 18 ஆயிரம் கோடி ரூபாய் என கூறப்பட்டுள்ளது. இந்த சாலையானது 4 வழிசாலையாக அமைக்கப்பட்டு வரும் நிலையில், இந்த திட்டத்தின் கீழ் சுமார் 350 கிமீ இருந்த தூரமானது, பல்வேறு கணக்கீடுகள் கொண்டு, தற்போது 258 கிமீ அளவுக்கு சுருக்கப்பட்டுள்ளது.
இந்த அதிவிரைவு சாலை பணி எப்போது முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வரும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், மத்திய அமைச்சர், அடுத்த ஆண்டு ஜனவரியில் திறக்கப்படும் என தெரிவித்து உள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, சென்னையில் இருந்து டெல்லி வரை சாலை மார்க்கமாக விரைவில் நெடுஞ்சாலை அமைக்கப்படும் என புதிய தகவலை தெரிவித்ததுடன், அதற்கு முன்னர் தற்போது சென்னை முதல் பெங்களூரு வரையில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ள அதிவிரைவு சாலை வரும் ஜனவரி மாதம் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், இந்த அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை மூலம் சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு 2 மணிநேரத்தில் பயணிக்கலாம் எனவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *