• Tue. Apr 30th, 2024

திருச்சி மலைக்கோட்டை பகுதிகளில் வணிக நிறுவனங்கள் மூடல்..!

Byவிஷா

Mar 9, 2023

திருச்சியில் குடிநீர் குழாய் பணிகள் நடைபெறுவதால் மலைக்கோட்டை சுற்றியுள்ள 1500 வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோக குழாய் மற்றும் பாதாள சாக்கடை புணரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்திற்கு உட்பட்ட சிங்காரத்தோப்பு, மலைவாசல், சின்னகடை வீதி, சூப்பர் பஜார் ஆகிய பகுதிகளில் குடியிருப்புகள், சில்லறை வியாபாரம் மற்றும் வணிகங்கள் நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன.
குடிநீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடை குழாய் புணரமைக்கும் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதால், பணியின் அவசர அவசியம் கருதி, முதல் மூன்று நாட்கள் சிங்காரத் தோப்பு தெருவில் சூப்பர் பஜார், சின்ன கடை வீதி முதல் பெரியகடை வீதி சந்திப்பு வரை உள்ள அனைத்து கடைகள், சில்லறை மற்றும் வணிக நிறுவனங்கள் ஆகியவைகளை திறக்காமல் இருப்பதற்கு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதனால் (06.03.2023) முதல் மலைக்கோட்டை பகுதியைச் சுற்றியுள்ள சிங்காரத்தோப்பு, பெரிய கடை வீதி, சின்ன கடைவீதி, சூப்பர் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் 1500க்கும் மேற்பட்ட சில்லறை மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. எப்பொழுதும் மக்கள் கூட்டம் பரபரப்பாக காணப்படும் இப்பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மட்டுமில்லாமல் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பணிகள் முடிந்தவுடன் (09.03.2023) இன்று முதல் கடைவீதி சாலைகள் திறக்கப்பட்டு, வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும். இப்பணியினால் ஏற்படும் சிரமங்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு மாநகராட்சி நிர்வாகம் கேட்டுகொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *