• Thu. May 2nd, 2024

தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க
பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் பணி நியமனங்களில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதி உள்ளார்.
நாட்டில் அனைத்து பகுதிகளை சேர்ந்த மக்களுக்கும் போதுமான வாய்ப்புகள் வழங்குவதன் மூலம் மட்டுமே சிறந்த சேவை வழங்குவதை உறுதிசெய்திட முடியும். நல்ல நிர்வாகத்திற்கு பொதுமக்களுடன் இணக்கமாக பழகுதல், உள்ளூர் மொழி தெரிந்திருத்தல், கலாசாரத்தில் பரிச்சயம் போன்றவை முக்கியமானவை. கல்வி மற்றும் தொழில்நுட்பத்தில் ஒப்பீட்டளவில் பரந்த அறிவு மற்றும் திறமையுடன் கூடிய மனித வளங்களை தமிழ்நாடு கொண்டுள்ளதால், அவற்றை நன்கு பயன்படுத்திட முடியும்.
தமிழகத்தில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்கள் மற்றும் ஒன்றிய பொதுத்துறை நிறுவனங்களின் பணி நியமனங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என பல்வேறு மாணவர் நலச் சங்கங்கள், அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 2021-2022-ம் ஆண்டுக்கான பணியாளர் தேர்வாணையத்தின் வருடாந்திர அறிக்கையில், பணியாளர் தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதி வாய்ந்த நபர்களில், 4.5 சதவீதம் அளவில் மட்டுமே தென் மண்டலத்தை சேர்ந்த தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.
தென் மண்டலத்தில் ரயில்வே பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல. இது வேலை தேடும்இளைஞர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும், சமூக, அரசியல் வட்டாரத்தில் கவலையையும் ஏற்படுத்தி இருக்கிறது. இத்தகைய சமச்சீரற்ற பணித்தேர்வு முறை தவிர்க்கப்பட வேண்டிய தாக்கங்களைக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், தமிழர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரித்திடும் வகையில் ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையங்களால் தமிழகத்தில் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளையும் தமிழில் நடத்திட வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்கள் மற்றும் ஒன்றிய பொதுத்துறை நிறுவனங்களின் பணி நியமனங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளித்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *