• Sat. Jan 24th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

Byவிஷா

Dec 23, 2022

நற்றிணைப் பாடல் 82:

நோயும் நெகிழ்ச்சியும் வீடச் சிறந்த
வேய் வனப்புற்ற தோளை நீயே,
என் உயவு அறிதியோ, நல் நடைக் கொடிச்சி!
முருகு புணர்ந்து இயன்ற வள்ளி போல, நின்
உருவு கண் எறிப்ப நோக்கல் ஆற்றலெனே-
போகிய நாகப் போக்கு அருங் கவலை,
சிறு கட் பன்றிப் பெருஞ் சின ஒருத்தல்
சேறு ஆடு இரும் புறம் நீறொடு சிவண,
வெள் வசிப் படீஇயர், மொய்த்த வள்பு அழீஇ,
கோள் நாய் கொண்ட கொள்ளைக்
கானவர் பெயர்க்கும் சிறுகுடியானே.

பாடியவர்: அம்மூவனார்
திணை: குறிஞ்சி

பொருள்:
தோழியின் உதவியால் தலைவியைப் பெற்ற தலைவன் அவளது அழகு அவனைக் கொள்ளையிடுவதை அவளிடம் சொல்லிப் பாராட்டுகிறான்.
உன் தோள், மூங்கில் போன்ற தோள், (என்னை அரவணைக்கும் தோள்) என்னைக் காம நோயிலிருந்து விடுவிக்கும். நெஞ்சு நெகிழ்ந்து புண்ணாகிக் கிடந்த நிலையிலிருந்து என்னை விடுவிக்கும். என் நெஞ்சிலிருக்கும் ஏக்க-நோய் (உயவு) உனக்குத் தெரியுமா? நீ கொடிபோன்றவள் (கொடிச்சி). (படரவேண்டியவள்). கற்பு என்னும் நன்னடத்தை கொண்டவள். முருக தெய்வத்தைப் புணர்ந்த வள்ளி போன்றவள். உன் உருவ-அழகு என்னைத் தூக்கி வாரிப் போடுகிறது. நீ என்னை அப்படிப் பார்க்காதே. என்னால் தாங்கமுடியாது. நாகமரச் சோலை வழியில் ஆண் காட்டுப்பன்றி சேற்றில் கிடக்கும். அதனை வேட்டைநாய் (கோள்நாய்) முடுக்கும். பன்றி சினம் கொண்டு பாயும். அதன் சினத்தால் பன்றியின் உடலில் படிந்திருக்கும் சேறு உலர்ந்து திருநீறு பூசியது போலக் காய்ந்துவிடும். நாய் அந்தப் பன்றியின் தோலைக் (வள்பு) கிழித்து, தசையைப் பிடுங்கும். அப்போது காட்டுமக்கள் (கானவர்) பன்றியை உணவுக்காக எடுத்துச் செல்வர். அந்தக் கானவர் வாழும் ஊரில் இருப்பவள் நீ ஆயிற்றே! அப்படி என்னைப் பார்க்காதே.