நற்றிணைப் பாடல் 83:
எம் ஊர் வாயில் உண்துறைத் தடைஇய
கடவுள் முது மரத்து, உடன் உறை பழகிய,
தேயா வளை வாய், தெண் கண், கூர் உகிர்,
வாய்ப் பறை அசாஅம், வலி முந்து கூகை!
மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல்,
எலி வான் சூட்டொடு, மலியப் பேணுதும்;
எஞ்சாக் கொள்கை எம் காதலர் வரல் நசைஇத்
துஞ்சாது அலமரு பொழுதின்,
அஞ்சு வரக் கடுங் குரல் பயிற்றாதீமே.
பாடியவர்: பெருந்தேவனார்
திணை: குறிஞ்சி
பொருள்:
“கூகையே! நீ, அவர் என்னை நாடி நள்ளிரவில் வரும்போது உன் குரலை எழுப்பி, மற்றவர்களின் தூக்கத்தைக் கலைத்து எழுப்பாமல் இருந்தால், உனக்கு எலிக்கறியைச் சுட்டு விருந்து படைக்கிறேன்” என்று தலைவியின் சார்பில் தோழி வேண்டிக்கொள்கிறாள்.
எங்களுடைய ஊர் வாயிலில் மக்கள் உண்ணும் நீர் எடுத்துச் செல்லும் துறை உள்ளது. அதற்கு முன்புறம் கடவுளாக வழிபடும் ஆண்டு முதிர்ந்த கடவுள்-முதுமரம் இருக்கிறது. அந்த இடத்தைப் பழகும் இடமாகக் கொண்டு வாழும் கூகையே, தேயாமல் வளைந்த வாயும், உருண்டு திரண்ட தெண்கண்ணும், கூர்மையான கால்நகங்களும் கொண்ட கூகையே, வாயில் பறையொலி எழுப்பும் கூகையே, ஆட்டுக்கறி போட்டு, நெய் ஊற்றி, வெள்ளைப் பொங்கல் வைத்து, எலிக்கறியும் சுட்டு உடன் வைத்து, வேண்டுமளவு உனக்குப் படையல் செய்து உன்னைப் பாதுகாக்கிறேன். அதற்குக் கைம்மாறாக நீ எனக்கு ஒன்றே ஒன்று செய்ய வேண்டும். நாங்கள் விரும்பும் காதலர் வரும்போது நீ உன் குரலை எழுப்பாமல் இருந்தால் போதும்.