• Fri. May 3rd, 2024

பெங்களூருவில் இடிந்து தரைமட்டமான 3 மாடி கட்டடம்!

Byகாயத்ரி

Oct 9, 2021

கர்நாடக மாநிலம் பெங்களூரு ராமமூர்த்திநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கஸ்தூரிநகர் அருகே டாக்டர்ஸ் லே-அவுட், 2-வது கிராசில் தரை தளத்துடன் கூடிய 3 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் ஆயிஷா பெய்க் என்பவருக்கு சொந்தமானதாகும். அந்த கட்டிடத்தில் 8 வீடுகள் உள்ளன. அவற்றில் 3 வீட்டில் மட்டும் குடும்பத்தினர் வசித்து வந்தனர். மற்ற 5 வீடுகளும் காலியாக இருந்தது.
இந்த நிலையில், நேற்று காலையில் திடீரென்று 3 மாடி கட்டிடத்தின் ஒருபகுதி லேசாக சரிந்தது. இதனால் குடியிருப்பில் வசிக்கும் 3 குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக வீடுகளில் இருந்து 3 குடும்பத்தினரும் வெளியே வந்தார்கள். ஆனால் அவா்களது உடைமைகள் வீடுகளிலேயே இருந்தது. பின்னர் நேற்று மதியம் திடீரென்று 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து பக்கத்து வீட்டின் மீது சாய்ந்தது. ஆனால் கட்டிடம் இடிந்து முழுவதுமாக கீழே விழாமல் பக்கத்து கட்டிடத்தின் சாய்ந்தபடி நின்றது. அந்த குடியிருப்பில் வசித்தவர்கள் காலையிலேயே வெளியே வந்து விட்டதால், அதிர்ஷ்டவசமாக எந்த உயிர் சேதமும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இதுபற்றி அறிந்ததும் ராமமூர்த்திநகர் போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் அந்த வழியாக பொதுமக்கள் யாரும் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. முன் எச்சரிக்கையாக அக்கம் பக்கத்தில் வசித்தவர்களும், வேறு இடத்திற்கு மாற்றப்பட்டார்கள். இதுகுறித்து தகவல் அறிந்தத மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா, சம்பவ இடத்திற்கு சென்று இடிந்து விழுந்த கட்டிடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
இதுகுறித்து மாநகராட்சி தலைமை கமிஷனர் கமிஷனர் கவுரவ் குப்தா நிருபர்களிடம் கூறுகையில், “பெங்களூரு கஸ்தூரிநகரில் தரைதளத்துடன் 2 மாடி வீடு கட்டுவதற்கு கடந்த 2012-ம் ஆண்டு உரிமையாளர் அனுமதி பெற்றிருந்தார். 2014-ம் ஆண்டு தான் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மாநகராட்சியின் அனுமதியை மீறி 3 மாடி கட்டிடத்தை உரிமையாளர் கட்டி இருந்தார். வீட்டுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பை பெற்றுவிட்டு, வேறு ஒருவரிடம் விற்றிருந்தார். ஆனால் மாநகராட்சியிடம் இருந்து என்.ஓ.சி. பெறவில்லை.


விதிமுறைகளை மீறி கூடுதலாக 1 மாடி கட்டி இருப்பதால், கட்டிடம் சாய்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சிவில் சட்டம் மற்றும் கிரிமினல் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கட்டிடத்தை இடித்து அகற்ற உத்தரவிட்டுள்ளேன். உடனடியாக 3 மாடி கட்டிடம் இடித்து அகற்றப்படும். இந்த சம்பவத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *