பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதாக 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் ஜுப்ளி ஹில்ஸ் பகுதியில் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், இவரது வீட்டின் மீது உஸ்மானிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் அமைப்பினர் சிலர் நேற்று கல்வீச்சுத் தாக்குதல் நடத்தினர். அத்துடன் வீட்டின் மதிற்சுவரைத் தாண்டிக் குதித்து உள்ளே சென்று அவர்கள் கற்களை வீசித் தாக்கினர். மேலும் அங்கு வீட்டு வளாகத்தில் இருந்த பூந்தொட்டிகளையும் உடைத்து தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது, ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்புக் காட்சி திரையிடலின்போது கூட்ட நெரிசலில் உயிரிழந்த ரேவதி என்ற பெண்ணின் குடும்பத்தாருக்கு நடிகர் அல்லு அர்ஜூன் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும், ரேவதியின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் உஸ்மானிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் அமைப்பினர் வலியுறுத்தினர். இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் விரைந்து வந்து கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்ட 8 பேரையும் கைது செய்துள்ளனர்.
கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த தெலங்கானா போலீஸார் அல்லு அர்ஜூன் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதன் பிறகு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.