திருவனந்தபுரத்தில் தெருநாய் கடித்ததில், மூன்று தவணை தடுப்பூசி போட்ட பிறகும், வெறிநாய்க்கடி உறுதி செய்யப்பட்ட ஏழு வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். பத்தனபுரம், குன்னிக்கோடு, கிணற்றின்கரை பகுதியைச் சேர்ந்த ஜாஸ்மின் மன்ஸிலில் வசித்து வந்த நியா ஃபைசல் என்ற 7 வயது சிறுமி உயிரிழந்தார்.

கடந்த ஏப்ரல் 8-ம் தேதி நியாவை நாய் கடித்துள்ளது. விளக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், புனலூர் தாலுகா மருத்துவமனையிலும் நியாவை பெற்றோர் அழைத்துச் சென்று தடுப்பூசி போட்டுள்ளனர். தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது தவணை தடுப்பூசிகளும் போடப்பட்டன. இந்நிலையில், கடந்த 29-ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டதால், முதலில் தாலுகா மருத்துவமனையிலும், பின்னர் திருவனந்தபுரம் எஸ்ஏடி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார்.
மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மரணமடைந்தார். தடுப்பூசி போட்ட பிறகும் வெறிநாய்க்கடி ஏற்பட்டு, கடந்த ஒரு மாதத்தில் ஏற்கனவே இரண்டு சிறுமிகள் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவம் மீண்டும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.