தமிழகத்தில், கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் தொடக்க கூட்டுறவு பண்டக சாலைகள் சார்பில் ரேஷன் கடைகள், சிறிய பல்பொருள் அங்காடிகள் நடத்தப்படுகின்றன.
இந்த பண்டகசாலைகளில் செயலர், கணக்கர், எழுத்தர், காசாளர் உள்ளிட்டோர் பணிபுரிகின்றனர்.அவர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள ஊதிய நிர்ணயம், கடந்த 2016ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், ஊதிய உயர்வு வழங்குமாறு இவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக பரிசீலிக்க, கூடுதல் பதிவாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு ஊதிய உயர்வு வழங்க பரிந்துரை செய்தது.அதன் அடிப்படையில் தற்போது, புதிய ஊதியம் நிர்ணயம் செய்யுமாறு, மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தொடர்ந்து லாபத்தில் இயங்கும் பண்டகசாலை ஊழியர்களுக்கு 7 சதவீதமும், தொடர்ந்து நஷ்டத்தில் செயல்பட்டு நடப்பாண்டில் லாபம் ஈட்டிய சங்கங்களுக்கு 5 சதவீதமும் ஊதிய உயர்வு அளிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து நஷ்டத்தில் செயல்படும் பண்டகசாலை ஊழியர்களுக்கு 3 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆண்டு ஊதிய உயர்வு, வீட்டு வாடகைப் படி, பயணப்படி, மருத்துவப்படி, மாற்றுத் திறனாளிகள் போக்குவரத்துப்படி, மருத்துவ காப்பீட்டுத் திட்டம் போன்றவற்றையும் செயல்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ஊதியம் வரும் ஜனவரி முதல் நடைமுறைக்கு வர நிர்ணயிக்கப்பட்டுள்ளது.