

சேலம் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று நண்பகலில் பெய்யத் தொடங்கிய மழை இரவு வரை நீடித்ததால் சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஒன்பதாவது கோட்டம் அல்லிக்குட்டை, மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள ஏழுமலை என்பவரின் ஓட்டு வீடு மழை காரணமாக இடிந்து விழுந்தது. இதில், முதியவர் ஏழுமலை மற்றும் அவரது மகள் காளியம்மாள் (40), பேத்தி புவனா (20), பேரன் மாரியப்பன் (18) ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர்.
ஏழுமலையின் பேரன் பால சபரிநாத் (5) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். வீடு இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்த ஏழுமலை உள்ளிட்ட 4 பேரை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்து ராஜ் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஏழுமலை குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு, சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர்.