கோவை அடுத்து பேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளி கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை நடைபெறுவதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அவரின் உத்தரவின் பேரில் பேரூர் காவல் துணை கண்காணிப்பாளர் சிவக்குமார் மேற்பார்வையில் பேரூர் தனிப்படை காவல் துறையினர் பேரூர் – செட்டிபாளையம் ஊராட்சி அலுவலகம் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்பொழுது அங்கு உள்ள குப்பை கிடங்கு அருகே சந்தேகத்திற்கு இடமாக ஒரு கும்பல் நின்றது. அந்த கும்பல் காவல் துறையினரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றது. உடனே காவல் துறையினர் விரைந்து செயல்பட்டு அந்த கும்பலை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். இதில் அவர்களிடம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

இது தொடர்பாக காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் பேரூர் செட்டிபாளையம் நடராஜ் நாடார் வீதியைச் சேர்ந்த ராகுல், சக்திவேல், பச்சாபாளையம் பகுதியை சேர்ந்த சஞ்சீவ், மனோஜ் குமார், சஞ்சய் என்பது தெரியவந்தது. இது குறித்து பேரூர் காவல்துறை வழக்கு பதிவு செய்து கஞ்சா விற்றதாக அந்த ஐந்து பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 510 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.











